தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் திருவல்லிக்கேணியில் மூடப்படும் மேன்சன்கள்

* ஒரு அறையில் ஒருவர் மட்டுமே தங்க அனுமதி

* நடுத்தெருவில் நிற்கும் வெளியூர் வாசிகள்
Advertising
Advertising

சென்னை: சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக திருவல்லிக்கேணி பகுதியில் பல மேன்சன்கள் மூடப்பட்டுவருகின்றன. இதனால் வெளியூர்வாசிகள் என்ன செய்வது என்று தெரியாமல் நடுத்தெருவில் நிற்கின்றனர். தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் பொது மக்கள் திண்டாடிவருகின்றனர். பல கிராமங்களில் வாரம் ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர்  கேட்டு பொதுமக்கள் தினசரி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னை பொறுத்தவரரையில் நாள் ஒன்று 550 மில்லியின் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால் அதைவிட குறைவான தண்ணீரே  விநியோகம் செய்யப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சென்னை மக்கள் தண்ணீர் குடங்களுடன் தெரு தெருவாக அலைந்துவருகின்றனர். தண்ணீர் லாரிகள் எப்போது வரும் என்று காத்துக்கிடக்கின்றனர். தண்ணீர்  பிரச்னையால் சென்னையில் உள்ள பல உணவகங்களை மூடும் நிலைமைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் தண்ணீர் பிரச்னையால் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள மேன்சன்களும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.   

சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 1000 த்திற்கும் மேற்பட்ட மேன்சன்கள் உள்ளன. இந்த மேன்சன்களில் லட்சக்கணக்கான வெளியூர்வாசிகள் தங்கி சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர்.  தண்ணீர் பிரச்னை தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அனைத்து மேன்சன்களிலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. சில மேன்சன்களில் கடைசி வரை தண்ணீர் கிடைக்கவேஇல்லை. இதனைத் தொடர்ந்து தண்ணீர் பிரச்னையை  காரணம் காட்டி அறைகளை வாடகைக்கு விடுவதை உரிமையாளர்கள் குறைத்துவந்தனர். இதன்படி இரண்டு நபர்கள் தங்கும் அறையில் ஒருவரை மட்டுமே தங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.  இதைத் தவிர்த்து சில மேன்சன்களில் காலை  மாலை என்று இரண்டு வேளை மட்டும் தண்ணீர் விநியோகம் செய்தனர். அந்த நேரத்தில் தண்ணீரை வாளியில் பிடித்து வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கண்டிஷன் போட்டனர்.

இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்து வருதால் மேன்சன்களை மூடும் நிலைமைக்கு உரிமையாளர்க்ள தள்ளப்பட்டுள்ளனர். அதன்படி ஒரு சில மேன்சன்களில் தண்ணீர் பிரச்னை காரணமாக மேன்சன் மூடப்படுகிறது என்று  சுவர்களில் ஒட்டிவைத்துள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வெளியூர்வாசிகள் நடுத்தெருவில் நிற்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் திருவல்லிக்கேணியில் உள்ள பல மேன்சன்கள் மூடப்படும் அபாயம் ஏற்படும் என்று  தங்கியிருப்பவர்கள் தெரிவித்தனர்.

சில மேன்சன்களில் காலை மாலை என்று இரண்டு வேளை மட்டும் தண்ணீர் விநியோகம் செய்தனர்.

Related Stories: