'வால்'கவிதை தொகுப்புக்காக எழுத்தாளர் சபரிநாதனுக்கு 'சாகித்ய யுவ புரஸ்கார்'விருது அறிவிப்பு

புதுடெல்லி: எழுத்தாளர் சபரிநாதனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. வால் என்ற கவிதை தொகுப்புக்காக எழுத்தாளர் சபரிநாதனுக்கு 2019ம் ஆண்டிற்கான சாகித்ய யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எழுத்தாளர் தேவி நாச்சியப்பனுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும், 24 இந்திய மொழிகளில் எழுத்தாளர்கள் படைக்கும் கவிதை தொகுப்புகள், சிறுகதைகள், நாவல்கள் ஆகியவைகளில் சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் அறிவிக்கப்படும். அதன் அடிப்படையில், இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை தமிழகத்தில் இருந்து இரண்டு படைப்பாளிகள் தட்டிச் சென்றுள்ளனர்.

அதில் கவிதை எனும் பட்டியல் அறிக்கையில் சபரிநாதன் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர் சென்னையில் உள்ள அரசு வேலைவாய்ப்பகத்தில் செயல் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். மேலும் கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதி வருகிறார். இவர் 2011-ம் ஆண்டில் களம் காலம் ஆட்டம் மற்றும் 2016ம் ஆண்டு வால் என்ற கவிதை தொகுப்பையும் எழுதியுள்ளார். மேலும் குழந்தைகள் இலக்கிய பங்களிப்புக்காக சாகித்ய அகாடமியின் பால் புரஸ்கார் விருது தேவி நாச்சியப்பனுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு சஞ்சாரம் நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருதினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: