சந்திராயன்-2 நிலவில் இறங்கி நீர் இருப்பதை உறுதி செய்யும்: மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

ஓமலூர்: சந்திராயன்-2 நிலவில் இறங்கி நீர் இருப்பதை உறுதி செய்யும் என அறிவியல் தொழில்நுட்பக்குழு துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, புதிய பள்ளி துவக்க விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக்குழு துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, விமானம் மூலம் சேலம் வந்தார்.  அப்போது, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:செப்டம்பர் 6ம் தேதி சந்திராயன்-2, நிலவில் இறங்கி ஆய்வுப்பணியை துவங்கும். தொழில்நுட்ப ரீதியான அடுத்தக்கட்டம் தான் சந்திராயன்-2. சந்திராயன்-1 நிலவை சுற்றி ஆய்வு செய்தது. சந்திராயன்-2 நிலவில் இறங்கும் திட்டமாகும். மேலும்,  மனிதர்களை நிலவில் இறக்குவதற்கான மிகப்பெரிய முயற்சி இதுவாகும். சந்திராயன் 1, நிலவில் நீர் இருப்பதை 100 கி.மீ., தொலைவில் இருந்து கண்டறிந்தது. தற்போது, சந்திராயன்-2 நிலவில் இறங்கி, நீர் இருப்பதை உறுதி செய்யும். மேலும்,  விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சி படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை விண்வெளிக்கு சென்றவர்கள், கடலில் தான் இறக்கப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது விண்வெளி சென்றவர்களை தரையில் ஓடுதளத்தில் இறக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.  தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் விண்வெளி ஆய்வு படிப்புகள் மற்றும் சிறிய அளவிலான ஆராய்ச்சி செய்வதற்கான படிப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இவை கல்லூரிக்கு செல்லும்போது, பெரிய அளவிலான ஆய்வுக்கு உதவியாக இருக்கும். செயற்கை கோள்கள் ஏவப்படுவதால், ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதாக கூறுவது சரியான தகவல் கிடையாது. அதற்கு   வெப்பமயமாதல், மாசு உள்ளிட்ட நிறைய காரணங்கள் உள்ளது. இதனை நாம் ஆராய வேண்டும். இவ்வாறு  மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

Related Stories: