வேலூர் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக எடை குறைந்த 50 குழந்தைகளுக்கு நியுமோக்கால் தடுப்பூசி

வேலூர்: வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எடை குறைந்த 50 குழந்தைகளுக்கு நியுமோக்கால் தடுப்பூசி போடப்பட்டது. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த 50 குழந்தைகளுக்கு நியுமோக்கால் தடுப்பூசி போடும் நிகழ்ச்சி முதல்முறையாக நேற்று நடந்தது. இதில், கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்திமலர் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: குறை பிரசவத்தில் 1.5 கிலோவுக்கு எடை குறைவாக பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு தொற்று நோய் பாதிப்புகள் ஏற்படும். இதனை தடுக்க நியுமோக்கால் தடுப்பூசி போடப்படுகிறது. 6, 10 மற்றும் 14வது வாரங்களில் மூன்று தவணைகளாக தடுப்பூசி போட வேண்டும்.

இந்த தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படாது. ஒரு ஊசியின் விலை ₹3,900. இதனை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 50 குழந்தைகளுக்கு நியுமோக்கால் தடுப்பூசி போடப்பட்டது. மேலும், 469 நியுமோக்கால் தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உடல்நிலை பாதித்த தங்களது குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை போட்டு பயன்பெற வேண்டும், என்றார்.  துணை கண்காணிப்பாளர் ராஜவேலு, மயக்கவியல் துறை பேராசிரியை கோமதி, குழந்தைகள் துறை மருத்துவர்கள் தீனதயாளன், சங்கீதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: