செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களில் பேச தடை..மீறினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்: அதிமுக கட்சி தலைமை உத்தரவு

சென்னை: ஊடக விவாதங்களில் கட்சியினர் கலந்து கொள்ளக் கூடாது என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை தற்போது உள்ளது. இதனை மாற்றிவிட்டு ஒற்றைத் தலைமையில் கட்சி இயங்க வேண்டும் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சமீபத்தில் கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்கு கட்சியில் சில நிர்வாகிகள் ஆதரவும் தெரிவித்தனர். இந்த விவகாரம் தற்போது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் ஒற்றைத் தலைமை கோரிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், அதுபற்றி பேசப்படவில்லை.

இந்த நிலையில், அதிமுகவில் எழும் பிரச்னைகளை தடுக்க ஊடக விவாதங்களில் கட்சியினர் கலந்து கொள்ளக் கூடாது என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வழியாகவும், இன்னபிற சமூகத் தொடர்பு சாதனங்கள் வழியாகவும் கருத்துக்களை தெரிவிக்கும் பணிக்கென கழக செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கழக செய்தி தொடர்பாளர்கள் எந்த ஒரு விவகாரத்திலும் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதையும், கழகத்தின் சிந்தனை ஓட்டம் எத்தகையது என்பதனையும் கழக நிர்வாகிகள் ஒப்புதலைப் பெற்ற கருத்துகளை மட்டுமே தெரிவிப்பதற்கு உரிமை பெற்றவர்கள்.

நாடாளுமன்ற பொதுதத் தேர்தல் நடைபெற்று முடிந்து அடுத்தக்கட்ட அரசியல் பணிகள் தொடங்கி இருக்கும் இந்த வேலையில், கழக செய்தித் தொடர்பாளர்கள், தலைமைக் கழகத்தில் இருந்து அடுத்த அறிவுப்பு வரும் வரை எந்த ஒரு ஊடகத்திலும், பத்திரிகையிலும், சமூகத் தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மற்றவர்கள் யாரும் பத்திரிகைகளிலோ, ஊடகங்களிலோ இன்னபிற சமூகத் தொடர்பு சாதனங்களிலோ தங்கள் கருத்துக்களை கழகத்தின் கருத்துகளாகத் தெரிவிப்பது கூடாது. அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவினர், அதிமுக ஆதரவாளர்கள் என்ற பெயரில் தனி நபர்களை அழைத்து அதிமுகவின் பிரதிநிதிகள் போல சித்தரித்து அவர்களை அதிமுக சார்பில் கருத்துக்களை வெளியிடுவதை ஊடக மற்றும் பத்திரிக்கைகள் நிறுவனங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: