வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக் மீது இந்தியாவில் விதிக்கப்படும் 50 சதவீத இறக்குமதி வரியை ஏற்றுக் கொள்ள முடியாது’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க பொருட்கள் மீது இந்தியாவில் அதிக இறக்குமதி வரி விதிக்கப்படுவதற்கு அதிபர் டிரம்ப் அவ்வப்போது கண்டனமும், எதிர்ப்பும் பதிவு செய்து வருகிறார். அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு இந்தியாவில் 100 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, கடந்த பிப்ரவரியில் இந்த வரியை 50 சதவீதமாக இந்தியா குறைத்தது. இதனால், டிரம்ப் கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்தார். கடந்த திங்கட்கிழமை இந்த பிரச்னையை அவர் மீண்டும் கிளப்பினார். இது பற்றி தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டி: ஹார்லி டேவிட்சன் பைக்குகள் உள்பட அமெரிக்க உற்பத்தி பொருட்களுக்கு இந்தியாவில் விதிக்கப்படும் இறக்குமதி வரி ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் உள்ளது.