ஆசிரியை மீது பொய் வழக்கு இன்ஸ்பெக்டர், எஸ்ஐ.க்கு 1 லட்சம் அபராதம் : மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்தவர் அந்தோணி அம்மாள். அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2010ம் ஆண்டு மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், எனது வீட்டுக்கு எதிரே வசிக்கும் 2 பேர், என்னை தகாத வார்த்தைகளால் பேசி, தவறாக நடந்து கொண்டனர். இதுகுறித்து நான் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் வழக்கு சம்மந்தமாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தால் கொலை செய்து விடுவதாக அவர்கள் மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அந்த சமயத்தில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோரிடம் புகார் செய்தேன். ஆனால் அவர்கள், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் விபசார வழக்குப்பதிவு செய்து உள்ளே தள்ளிவிடுவேன் என்றும் எனக்கு மிரட்டல் விடுத்தனர்.

மேலும் நான் ஒருவரை தாக்கியதாக போலீசார் என் மீது பொய் வழக்குப்பதிவு செய்தனர். எனவே, இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி துரை ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக அவர்கள் இருவருக்கும் சேர்த்து 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு 4 வாரத்துக்குள் வழங்கிவிட்டு இன்ஸ்பெக்டர் உள்பட இருவரிடமும் இருந்து வசூலித்துக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

Related Stories: