மாற்றுத்திறனாளிக்கு எச்.ஐ.வி பாதித்த ரத்தம் ஏற்றிய போலி டாக்டர்: திருவண்ணாமலை கலெக்டரிடம் பெற்றோர் புகார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த கவுக்கரவாடி ஊராட்சியை சேர்ந்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சில நாட்களுக்கு முன்பு கலெக்டரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது 19 வயதான மாற்றுத்திறனாளி மகன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாங்கள் வீட்டில் இல்லாத போது தனியாக இருந்தான். அவனுக்கு அதே பகுதியை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக டிரைவரும் போலி டாக்டருமான செல்வகுமார் என்பவர், உனது அப்பா, உனக்கு உடல்நிலை சரியில்லாதால் ஊசி போட சொன்னார் என்று கூறி, ஊசி போட்டுவிட்டு சென்றார்.

ஊசிபோட்டதால் அவனுக்கு அதிக வலி ஏற்பட்டு கை வீக்கம் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி இருந்தான். நாங்கள் வீட்டிற்கு வந்ததும், சரியாக பேச முடியாமல் சைகை மூலம் தனக்கு ஊசி போட்டதை தெரிவித்தான். இதனால், அதிர்ச்சியடைந்த நான் செல்வகுமாரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, காய்ச்சலுக்கு தான் ஊசி போட்டேன் என்று தெரிவித்தார். எனது மகனுக்கு காய்ச்சல் இருப்பதாக உன்னிடம் தெரிவிக்கவே இல்லையே, எப்படி ஊசி போட்டாய் என கேட்டதற்கு முறையான பதில் தெரிவிக்காமல் போனை துண்டித்து விட்டார். பின்னர், 2 மாதம் கழித்து மகனுக்கு ஊசி போட்ட பகுதியில் கட்டி ஏற்பட்டது. இதனால், மகனை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனர்.

மருத்துவரிடம் எப்படி இந்த நோய் வரும் என கேட்டபோது, தாய், தந்தைக்கு இருந்தால் மகனுக்கு வரும். இல்லை என்றால் எங்காவது ரத்தம் ஏற்றியிருப்பீர்கள் அதன் மூலம் பரவலாம் என தெரிவித்தனர். பின்னர், நாங்கள் பரிசோதனை செய்தபோது, எங்களுக்கு எய்ட்ஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. பின்னர், மகனுக்கு மட்டும் எப்படி வந்தது என தெரியாமல் இருந்தோம். அப்போது, தான் செல்வகுமார் போட்ட ஊசி முலம் பரவியிருக்கும் என தெரியவந்தது. நிலம் தொடர்பாக செல்வகுமார் உறவினருடன் ஏற்பட்ட பிரச்னையில் முன்விரோதம் காரணமாக செல்வகுமார் தான் எய்ட்ஸ் பாதித்த ரத்தத்தை எனது மகனுக்கு ஏற்றியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்ட எனது மகனுக்கு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மனு அளித்து சில நாட்களாகியும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று பாதிக்கப்பட்ட மகனுடன் பெற்றோர் மீண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறிய வந்தார். அப்போது, கலெக்டர் ஜமாபந்திக்கு சென்றுவிட்டதால், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது, இது தொடர்பாக கலெக்டரின் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் கூறுகையில், `மாற்றுத்திறனாளியான இளைஞருக்கு எய்ட்ஸ் பாதிப்பு உள்ளது. இது எப்படி அவருக்கு பரவியது என்பது தெரியவில்லை. அவரது பெற்றோர் கூறுவது போன்று ஊசி மூலம் ரத்தம் ஏற்றியதால் பரவியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

Related Stories: