எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் தோவாளையில் ஆபத்தான தபால் நிலையம்

ஆரல்வாய்மொழி: தோவாளையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான கட்டிடத்தில் 50 ஆண்டுக்கும் மேலாக தபால் நிலையமும், இதை தொட்டாற்போல் அதிகாரியின் குடியிருப்பும் உள்ளது. தோவாளை, குமரன் புதூர், வீரமார்த்தாண்டன் புதூர் உள்பட சுற்றுவட்டார பகுதி மக்கள் இதன் மூலம் பயன் அடைந்து வருகின்றனர். தற்போது கட்டிடத்தின் சுவர் விரிசல் விழுந்தும், ஓடுகள் உடைந்தும் காணப்படுகிறது.இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வளாகத்தில் நின்ற மரம் பலத்த காற்றுக்கு முறிந்து விழுந்தது. இதனால் தபால் நிலைய அதிகாரி இங்கு தங்க முடியாமல் வெளியேறினார். தற்போது கட்டிடத்தின் ஒரு பகுதி எப்போது வேண்டு மானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கடந்த சில நாளாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கட்டிடத்தின் சுவர்கள் முழுவதும் விரிசல் விழுந்து நீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

தற்போது தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், எப்போது வேண்டுமானாலும் கட்டிடத்தின் பக்க சுவர், மேற்கூறை இடிந்து விழுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், தபால் நிலைய உயர் அதிகரிகாரிகள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தும் பலன் இல்லை. ஆகவே விபத்து ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: