அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை எதிரொலி... குமரி மாவட்டத்தில் கனமழை நீடிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் கனமழை நீடித்து வரும் நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் விட்டுவிட்டு கனமழை பெய்த வண்ணம் உள்ளது. மழை காரணமாக வெப்பத்தின் தாக்கம் தணிந்துள்ளது. இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வீசுகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் குமரி மாவட்டத்திலும் இந்த மழையின் தாக்கம் காணப்படுகிறது. மேலும் அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையும் குமரி மாவட்டத்தில் மழையின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘வாயு’ புயலாக வலுப்பெறும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் மழை மேலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தவண்ணம் இருந்தது. நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்து வருவதால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இரவில் தொடங்கிய மின்தடை பகலிலும் நீடித்தது. மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இரவில் பல மணிநேரம் ஏற்பட்ட மின்தடையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் அருவியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

நாகர்கோவில் நகர பகுதியில் பல இடங்களிலும் சாலைகளில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பள்ளங்களை மழைக்காலம் தொடங்கும் முன்னர் மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே சீரமைக்கப்பட்ட சாலைகளும் முறையாக சீர் செய்யப்படாததால் அவற்றில் புதியதாக பள்ளங்கள் உருவாகி சாலைகள் குண்டு குழிகள் நிறைந்ததாக மாறி வருகின்றன. குமரி மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 6 அடியாக உயர்ந்திருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 26.75 அடியும், சிற்றார்-1ல் 5.74 அடியும், சிற்றார்-2ல் 5.84 அடியும், பொய்கையில் 8.60 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 41.99 அடியும் நீர்மட்டம் காணப்பட்டது. நேற்று காலை வரை அதிகபட்சமாக பாலமோரில் 76 மி.மீ மழை பதிவாகி இருந்தது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 872 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து 64 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணைக்கு 164 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. சிற்றார்-1ல் 32 கன அடியும், சிற்றார்-2ல் 50 கன அடியும் நீர்வரத்து காணப்பட்டது. பேச்சிப்பாறை தவிர பிற அணைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: குளச்சல் கடல் பகுதியில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000க்கும் மேற்பட்ட பைபர் கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. கடந்த 1ம் தேதி முதல் 60 நாட்கள் குமரி மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் படகுகள் கடந்த 1ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆனால் கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை முதல் குளச்சல் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடலில் காற்றும் பலமாக வீசியது. சில வேளைகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கட்டுமரங்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவை மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. படகுகளுக்கு 60 நாட்கள் மீன்பிடிக்க தடை, மழை காரணமாக கட்டுமரங்கள் கடலுக்கு செல்லாததாலும் நேற்று குளச்சலில் மீன் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றுள்ளது. இது புயலாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக லட்சத்தீவுடன் சேர்ந்த அரபிக்கடல் பகுதியிலும், தென்மேற்கு வங்க கடல், லட்சத்தீவு கேரள- கர்நாடக கடல் பகுதிகளிலும் 13ம் தேதி வரை மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த கடற்காற்று வீசும் என்றும், மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை போன்று தென் தமிழகத்தில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் 3.5 அடி முதல் 4 மீட்டர் உயரத்திற்கு அலைகளின் தாக்கம் இருக்கும், மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வெறிச்சோடிய சுற்றுலா தலம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நேற்று அதிகாலை முதலே மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியது. இதுபோல கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள தள்ளுவண்டி கடைகள் உட்பட பல கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் காலை முதலே மின்தடையும் சேர்ந்து கொண்டதால் சுற்றுலா பயணிகள், கன்னியாகுமரி பகுதி பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையால் வெளியே தலைக்காட்ட முடியாமல் தங்கும் விடுதி அறைகளிலேயே தஞ்சமடைந்தனர்.

Related Stories: