முத்தரசன் கண்டனம் அதிமுக உட்கட்சி பூசலால் கோமா நிலையில் அரசு

திருத்துறைப்பூண்டி: அதிமுக உட்கட்சி பூசலால் அரசு நிர்வாகம் முடங்கி கோமா நிலையில் உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் திருத்துறைப்பூண்டியில் நேற்று அளித்த பேட்டி: ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மாநில அரசு மவுனம் சாதிப்பது, மத்திய அரசுக்கு உடந்தையாக இருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதை மாநில அரசு தெளிவுப்படுத்த வேண்டும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா பாசன மாவட்டங்கள் மட்டுமின்றி விழுப்புரம், ராமநாதபுரம், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமும் வெகுவாக பாதிக்கப்படும்.

மேலும் மாவட்ட மக்கள் வேலைவாய்ப்பை இழந்து வெளி மாநிலங்களுக்கு புலம் பெயரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் ஆளும்கட்சியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. அதில் தலையிட விரும்பவில்லை. ஆனால் ஆளும்கட்சியினர் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து செயலாற்ற முடியாமல் கோமாநிலைக்கு ஆளாகி உள்ளது. இதனால் மக்கள் பெரும்துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே, ஆளும்கட்சியினர் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து தொய்வில்லாமல் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Related Stories: