தன்னார்வலர்கள் மூலம் வழங்க ஏற்பாடு ஆந்திராவில் ரேஷன் பொருட்கள் பயனாளிகளின் வீடு தேடி வரும்

* அரசு ஊழியரின் புதிய பென்ஷன் திட்டம் ரத்து

* முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஜெகன் அதிரடி

திருமலை: ஆந்திராவில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் பயனாளிகள் வீட்டிற்கே சென்று தன்னார்வலர்கள் மூலமாக வழங்கப்படும் எனவும், அரசு ஊழியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவும் ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆந்திர மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த முதல் கூட்டத்தில் புதிதாக பதவியேற்ற 25 அமைச்சர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பேரணிநானே நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் அந்தந்த அமைச்சரவை துறைகளில் என்னென்ன பணிகள் நடைபெற்று உள்ளது. செய்யப்பட்ட பணிகளில் ஊழல். முறைகேடுகள். தவறுகள் நடைபெற்றுள்ளதா என்பதை பரிசீலிக்க அந்தந்த துறை செயலாளர்கள், அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தவறு இருந்தால் அதனை திருத்தவும், முறைகேடுகள் இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். அரசு ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஆலோசித்து முடிவு எடுப்பதற்காக நீதிபதிகள் தலைமையில் தனி கமிஷன் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

நீதிபதிகள் கமிஷன் முன்னிலையில் அனைத்து ஒப்பந்தங்களும் பரிசீலிக்கப்பட்டு இணையதள வெப்சைட்டில் ஒப்பந்தங்கள் வைத்து அதில் பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு அதற்கு ஏற்ப உரிய முடிவுகளை கமிஷன் அரசுக்கு பரிந்துரை செய்யும். நீதிபதி குழு வழங்கும் பரிந்துரையை ஏற்று முடிவு எடுக்கப்படும். முதல்வர் முதல் கிராமத்தில் உள்ள அதிகாரிகள் வரை யாரும் ஊழல் செய்யக்கூடாது என்பதே முதல்வரின் முக்கிய நோக்கம். ஊழல் இல்லாத மாநிலம் அமைக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

எனவே இரண்டரை ஆண்டுகள் பதவியில் இருக்கும் அமைச்சர்கள் என்ன செய்தாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம். அமைச்சர்கள் தவறு செய்தாலும், ஊழல் முறைகேடு புகார்கள் வந்தாலும் அவர்களை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதோடு, பதவியில் இருந்தும் விளக்கப்படும் என முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆகஸ்ட் 15, அக்டோபர் 15ம் தேதி முதல் கிராம தன்னார்வலர்கள் தங்கள் பணிகளை தொடங்க உள்ளனர். அரசு கொண்டு வரக்கூடிய திட்டங்கள் அனைத்தையும் வார்டு தன்னார்வலர்கள், கிராம தன்னார்வலர்கள் மூலமாக பயனாளிகளின் வீட்டிற்கு கொண்டு செல்லப்படும்.

இதற்காக கிராம தன்னார்வலர்களுக்கு இன்டர்மீடியட் கல்வித்தகுதியும், நகர பகுதியில் உள்ள தன்னார்வலர்களுக்கு டிகிரி கல்வித் தகுதியும், மலைவாழ் மக்கள் உள்ள மலை கிராம பகுதிகளில் உள்ள தன்னார்வலர்களுக்கு பத்தாம் வகுப்பு கல்வி தகுதியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் தன்னார்வலர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்குள் பணி நியமன ஆணை வழங்கப்படும். ரேஷன் கடைகளில் தற்போது வழங்கக்கூடிய அரிசி தரமற்ற நிலையில் உள்ளதால் அதனை வாங்க கூடிய பொதுமக்கள் ஒரு கிலோ ரூ.6 முதல் ரூ.10க்கு வெளியில் விற்கக் கூடிய நிலை ஏற்படுகிறது.

அதனை கள்ளச்சந்தையில் பெறுபவர்கள் பாலிஷ் செய்து மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரக்கூடிய நிலை உள்ளது. எனவே இதுபோன்ற நிலை அல்லாமல் அரசு அதிகாரிகள் நடுத்தர மக்கள் சாப்பிடக்கூடிய வகையில் இருக்கக் கூடிய அரிசியை அரசே கொள்முதல் செய்து அதனை 5 முதல் 15 கிலோ பாக்கெட்களாக கிராம தன்னார்வலர்கள் மூலமாக வீட்டிற்கே கொண்டு சென்று பயனாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு 9 மணி நேர மின்சாரத்தை இலவசமாக வழங்க எந்த தேதியை அறிவிக்கலாம் என்பது குறித்து மின்சார துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆரோக்கியஸ்ரீ திட்டத்தில் தற்போது உள்ள சிகிச்சைகளைக் காட்டிலும் கூடுதல் சிகிச்சை பெறுவதற்கும், பரிசோதனைகள் செய்வதற்கும், வெளி மாநிலங்களிலும் ஆரோக்கிய திட்டத்தில் சிகிச்சை பெறவும் அரசு முடிவு செய்துள்ளது. அரசு ஊழியரின் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: