13, 14ல் மூத்த தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை பாஜ புதிய தலைவர் ஜே.பி.நட்டா?

புதுடெல்லி: பாஜ அமைப்பு தேர்தலை நடத்துவது, புதிய தலைவர் தேர்வு ஆகியவை குறித்து வரும் 13, 14ம் தேதிகளில் பாஜ மூத்த  தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்த இருக்கிறார். மக்களவை தேர்தல் காரணமாக பாஜ.வின் அமைப்பு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. தற்போது, தேர்தல் முடிந்த நிலையில் கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்துவதற்கு பாஜ மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதை முன்னிட்டு பாஜ முக்கிய தலைவர்களை சந்தித்து கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா ஆலோசனை நடத்த உள்ளார். வரும் 13, 14ம் தேதிகளில் நடக்கவுள்ள இந்த சந்திப்பின்போது அமைப்பு தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைப்பு தேர்தல்கள் முடிந்த பின்னர் கட்சியின் தலைவரை தேர்வு செய்யும் பணிகளும் நடைபெறும்.

கட்சியின் தற்போதைய தலைவர் அமித் ஷாவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிந்த நிலையில், மக்களவை தேர்தலுக்காக அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது அவர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். பாஜ.வில் ஒருவருக்கு ஒரு பதவி கொள்கை பின்பற்றப்படுகிறது. அதன்படி, மத்திய அமைச்சர் பதவியில் அமித் ஷா இருப்பதால், தலைவர் பதவியில் இருந்து அவர் விலகுகிறார். எனவே, இந்த பதவிக்கு வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்நிலையில், பாஜ தலைவர் பதவியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா (56) நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. அதனால்தான், இந்த முறை அவருக்கு மோடி அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை. இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இவர், மோடி உள்ளிட்ட பாஜ மூத்த தலைவர்களின் நன்மதிப்பை பெற்றவர். ஆர்எஸ்எஸ். இயக்கத் தலைவர்களின் நம்பிக்கையை பெற்றவர்.

Related Stories: