மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்.குடன் மோதல் பாஜ தொண்டர்கள் 4 பேர் படுகொலை: அறிக்கை அளிக்க அமித்ஷா உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ தொண்டர்கள் இடையே அடிக்கடி அரசியல் ரீதியாக மோதல் ஏற்பட்டது. இதில், இரு தரப்பிலும் உயிர் பலி ஏற்பட்டது. பாஜ.வில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் சந்தேஷ்காலி பகுதியில் பாஜ - திரிணாமுல் இடையே மோதல் ஏற்பட்டது. கட்டிடம் ஒன்றில் இருந்த பாஜ சின்னத்தை திரிணாமுல் காங்கிரசார் நீக்கியதால் ஆத்திரமடைந்த பாஜ.வினர், திரிணாமுல் காங்கிரசாருடன் வாக்குவாதம் செய்தனர்.

இது மோதலாக மாறியது. இதில், பாஜ தொண்டர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டரும் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது. இது தொடர்பாக மாநில பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் சின்ஹா கூறுகையில், ‘‘பாஜ தொண்டர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து வரும் 12ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்,’’ என்றார். இந்நிலையில், இந்த மோதல் சம்பவம் பற்றி அறிக்கை அளிக்கும்படி மேற்கு வங்க அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: