வயதான பிஎஸ்எப் பெண் அதிகாரியின் பரிதாப நிலை பென்ஷன் பணத்தை கேட்டு அடித்து உதைக்கும் மருமகள்: பள்ளி மாணவி ரகசியமாக வீடியோ எடுத்தார்

மகேந்தர்கர்: எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த முன்னாள் பெண் அதிகாரியை, அவரது மருமகள் பென்ஷன் பணம் கேட்டு அடித்து துவைத்த வீடியோ வெளியானதால், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியானா மாநிலம் மகேந்தர்கர் மாவட்டம் நிவாஜ் நகர் பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியை, அவரது மருமகள் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், கட்டிலில் அமர்ந்திருக்கும் அந்த வயதான பெண்ணின் தலைமுடியை பிடித்து ஆட்டுவதும், கால் கைகளில் சகட்டுமேனிக்கு கடுமையாக தாக்குவதும் என தன்னால் முடிந்த அளவிற்கு கோபத்தை வயதான பெண்ணிடம் காட்டினார் அந்த மருமகள். அடிக்கடி நடக்கும் இந்த சம்பவத்தை பார்த்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், தன் வீட்டின் மாடியில் இருந்து அவர்களுக்கு தெரியாமல் வீடியோவில் பதிவிட்டு, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ பதிவு சம்பவம் அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் வரை சென்றுள்ளது. அதிர்சியடைந்த அவர், ‘மிகவும் வருந்தத்தக்க மற்றும் கண்டிக்கத்தக் செயல் இது. நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல’ என்று தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று நடத்தி, அந்த பெண்ணை கைது செய்து விசாரிக்கின்றனர். அதில், பாதிக்கப்பட்ட மூதாட்டி, நேதாஜி சுபாஷ் சந்திரபோசால் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் உறுப்பினர். தற்போது, மத்திய, மாநில அரசிடம் இருந்து மாதம் 30,000 ரூபாய் பென்ஷன் வாங்கி வருகிறார்.

ஏற்கனவே இந்திய எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி உள்ளார். மருமகளால் தாக்கப்பட்ட அந்த மூதாட்டியை மீட்ட போலீசார், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கைது செய்யப்பட்ட மருமகளின் பெயர் காந்தா தேவி. பாதிக்கப்பட்ட மூதாட்டியின் பெயர் சந்த் பாய். இதுகுறித்து, மகேந்தர்கர் போலீஸ் எஸ்பி சந்திரமோகன் கூறுகையில், ‘‘மூதாட்டியை, தனது மருமகள் சுமையாக நினைத்து தாக்கியுள்ளார். மூதாட்டியின் பென்ஷன் பணத்தை கேட்டு, அவரை துன்புறுத்தி உள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்ட நிலையில், மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’’ என்றார்.

Related Stories: