சென்னையில் வெயில் வாட்டி வதைக்கும் நேரத்தில் மாமல்லபுரத்தில் தொடரும் கடல் சீற்றம் படகுகள், ரிசார்ட்கள் கடும் சேதம்

சென்னை: மாமல்லபுரம் பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் கடல் சீற்றம் காரணமாக நேற்று முன்தினம் ஹோவர்கிராப்ட் பயணிக்க முடியாமல் கரை ஒதுங்கியது. இந்த நிலையில் நேற்று ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக படகுகள், ரிசார்ட்டுகள் கடும் சேதம் அடைந்துள்ளன. சென்னையில் வெயில் வாட்டி வதைக்கும் வேளையில் மாமல்லபுரத்தில் ஏன் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கேரளா உள்பட தென் மாநிலங்களில்  தென்மேற்குப்  பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அதன் தாக்கம் வங்கக்கடலிலும் எதிரொலித்துள்ளது. இதனால், வெப்பம் குறைந்து பலத்த காற்று வீசியது. இதையடுத்து நேற்று காலை முதலே வங்கக்கடல் அமைந்துள்ள திருவான்மியூர் முதல் கல்பாக்கம் வரை மழை பெய்யாத நிலையிலும் வானம் ஒருவித மேக மூட்டத்துடன் இருந்தது.

கடும் வெப்பம் சுட்டெரித்தாலும் இப்பகுதியில் காற்று வேகமாக வீசியது. நேற்று முன்தினம் இரவு முதல் கடல் வழக்கத்துக்கு மாறாக கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு, கோவளம், செம்மஞ்சேரி, புதிய கல்பாக்கம், நெம்மேலி, சூளேரிக்காடு, பட்டிபுலம், தேவனேரி, மாமல்லபுரம், கொக்கிலமேடு, வெண்புருஷம் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கரைக்கு திரும்பி வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. அதிக கடல் சீற்றத்தினால் 10 அடிக்கும் மேலாக எழும்பி கடல்நீர் அலை, கரையில் உள்ள சிறு ஓட்டல்கள், ரிசார்ட்களில் அளவுக்கதிகமாக புகுந்தது. இதனால் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல, கரையோரம் நிறுத்தப்பட்டு இருந்த படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதமடைந்தன. இதையடுத்து மீனவர்கள் தங்களது படகுகளை கயிறு கட்டி இழுத்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

Related Stories: