விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் நோயாளி ஸ்டெச்சரில் டைல்ஸ் கற்களை ஏற்றிச்சென்ற பணியாளர்கள்: கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்து செல்லும் ஸ்டெச்சரில், டைல்ஸ் கற்களை துப்புரவு பணியாளர்கள் ஏற்றிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கலெக்டர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசு பொதுமருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு விருத்தாசலம், பெண்ணாடம், வேப்பூர், மங்கலம்பேட்டை, கம்மாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் என்எல்சி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பதற்கான கட்டிடம் கட்டுவதற்கு அஸ்திவாரம் அமைக்கும் பணிக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. டைல்ஸ் வளாகப் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட டைல்ஸ் கற்களை, நோயாளிகளை கொண்டு செல்லும் ஸ்டெச்சரில் அடுக்கி வைத்து துப்புரவு தொழிலாளர்கள் தள்ளி சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் அங்கிருந்த நோயாளிகள் முகம் சுளித்தனர்.

மேலும், நோயாளிகள் வரும்போது அவர்களுக்கு ஸ்டெச்சர் கொடுக்க மறுக்கும் மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனையில் மற்ற பணிகளுக்கு ஸ்டெச்சரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் துப்புரவு பணிக்காக நியமிக்கப்பட்ட அவர்களை மற்ற கட்டிட கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனை மருத்துவமனையின் மருத்துவர்களே செய்யச் சொல்லி வற்புறுத்தி வருவதாகவும் அப்படி செய்யவில்லை என்றால் அவர்களை வேலையை விட்டு நிறுத்தி விடுவதாக மிரட்டுவதாகவும் இதனால் அவர்கள் இந்த பணியை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: