குற்றாலத்தில் ஓரிரு நாளில் சீசன் துவங்க வாய்ப்பு: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

தென்காசி: குற்றாலத்தில் ஓரிரு நாட்களில் சீசன் துவங்க வாய்ப்புள்ளதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாகும். இந்த சீசனை அனுபவிப்பதற்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தருகின்றனர். இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்காததால் சீசன் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.தற்போது கேரளாவில் பருவமழை துவங்கியுள்ளதால், குற்றாலத்தில் ஓரிரு நாளில் சீசன் துவங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

குற்றாலத்தில் அருவிக்குளியலுக்கு அடுத்தப்படியாக குடும்பத்துடன் பொழுதுபோக்குவதற்கு உள்ள ஒரு சில அம்சங்களில் படகு குழாம் முதன்மையாக உள்ளது. ஓங்கி உயர்ந்து நிற்கும் மலையை ரசித்தபடி படகு சவாரி செய்வதை சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர். சீசனையொட்டி ஐந்தருவி படகு குழாம் மற்றும் படகுகளை தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் படகு குழாமை சுற்றி வளர்ந்துள்ள புதர்களை அகற்றும் பணியும், படகு பழுதுபார்த்தலும் நடந்தது.

தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக அனைத்து படகுகளுக்கும் வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது. குளத்தில் தண்ணீர் நிரம்பியதும் படகு விடுவதற்கு தயார் நிலையில் தமிழ்நாடு ஓட்டல் நிர்வாகத்தினர் உள்ளனர்.

Related Stories: