சித்தூர் மாவட்டத்தில் 12ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு மாணவிகளுக்கு வழங்க 33,575 இலவச சைக்கிள்கள் தயார்: கல்வி அதிகாரி தகவல்

சித்தூர், ஜூன் 9: சித்தூர் மாவட்டத்தில் 12ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி மாணவிகளுக்கு வழங்க 33,575 புதிய இலவச சைக்கிள்கள் தயாராக உள்ளது என்று மாவட்ட கல்வி அதிகாரி பாண்டுரங்கன் தெரிவித்தார். சித்தூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரி பாண்டுரங்கன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் சித்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு மாணவிகளுக்கு வழங்க மொத்தம் 33 ஆயிரத்து 575 சைக்கிள்கள் தயார் நிலையில் உள்ளது.

இந்த சைக்கிள்கள்  வருகிற 12ம் தேதி பள்ளிகள் திறந்தபின் மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். போக்குவரத்து வசதி இல்லாத  கிராமங்களில் மாணவிகள் பள்ளிக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் இலவசமாக வழங்கப்படுகிறது.ஏப்ரல் மாதத்தில் சைக்கிள்கள் வழங்கப்பட இருந்தநிலையில் தேர்தல் விதிமுறைகளால் ஜூன் மாதத்தில் வழங்கப்படுகிறது.  அடுத்த ஆண்டில்  இருந்து ஏப்ரல் மாத முதல் வாரத்திற்குள் இலவச சைக்கிள்கள் வழங்கப்படும். தற்போது 33 ஆயிரத்து 575 சைக்கிள்கள் சித்தூர் நகரத்திற்கு வந்துள்ளது. இங்கிருந்து ஒவ்வொரு பள்ளியில் படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: