கஞ்சா வைத்திருந்த வழக்கில் யூடியூபர் சங்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்: மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கி மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சங்கரை ேதனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அப்போது காரில் கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக யூடியூபர் சங்கர், அவரது நண்பர் ராஜரத்தினம் (43), கார் டிரைவர் ராம்பிரபு ஆகியோர், 7 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், யூடியூபர் சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த மகேந்திரனை (24) கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 2.6 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சங்கரை கைது செய்த போலீசார், மதுரை அத்தியாவசிய மற்றும் போதைப் பொருள் தடுப்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சங்கரை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி பழனிசெட்டிபட்டி போலீசார் தரப்பில் மதுரை நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 16ம் தேதி நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, போலீஸ் காவலில் விசாரிக்க கோரும் வழக்கில் இன்றைக்கு (20ம் தேதி) சங்கரை ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதேபோல் கஞ்சா வழக்கில் சங்கருக்கு ஜாமீன் கோரி இரண்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களின் மீதான விசாரணையையும் இன்றைக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சங்கரை போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க கோரும் மனுவும், ஜாமீன் மனுவும் நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது; சவுக்கு சங்கருக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கி மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கையில் எலும்பு முறிவு உள்ள நிலையில், மருத்துவ சான்றிதழ் பெற்று வர நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post கஞ்சா வைத்திருந்த வழக்கில் யூடியூபர் சங்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்: மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: