கணக்கு காட்டுவது 4... இருப்பதோ 1 ஆம்புலன்ஸ்: பால் வேனில் பயணம் செய்யும் நோயாளிகள்... மதுரை அரசு மருத்துமவனையின் அவலம்

மதுரை:  மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை ஏற்றி, இறக்குவதற்கு  4 ஆம்புலன்ஸ்கள் இருந்தும், இயங்காத ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பால் வேனில் ஏற்றி நோயாளிகளை அனுப்பி வைக்கும் அவலம் தொடர்கிறது. மதுரை அரசு மருத்துமவனைக்கு தினமும் 10 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். 9 மாவட்டங்களின் மக்களுக்கென மருத்துவ சிகிச்சை தரும் இம்மருத்துவமனையில் 20க்கும் அதிக மருத்துவ துறைகள் செயல்பட்டு வருகின்றன. அருகிலேயே இதன் கட்டுப்பாட்டில் அண்ணா பஸ்நிலைய பகுதியில் விபத்து சிகிச்சை பிரிவுக்கான மருத்துவமனையும், அதன் அருகில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் உள்ளன.  

மைய மருத்துவமனையில்தான் முக்கிய ஸ்கேனிங் உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது.

எனவே இங்கிருந்து பிற மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் சென்று, அங்கிருந்து நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து வந்து, சிகிச்சை முடிந்ததும் கொண்டு போய் விட்டு வர வேண்டும். உள் நோயாளிகளை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு, அறுவை சிகிச்சைக்கு, இடம்மாற்றுவதற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் அவசியம். அரசு மருத்துமவனையில் இவ்வசதிக்கென எத்தனை ஆம்புலன்ஸ்கள் உள்ளன என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்டது. இதற்கு, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் 4 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், முறையாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மருத்துவமனையில் 4 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் இல்லை. ஒரு ஆம்புலன்ஸ் சேதமடைந்து இயக்காத நிலையில் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளை இடமாற்றம் செய்வதற்கு பால் கேன்கள் ஏற்றும் சரக்கு வாகனம் போல் ஒரு உள்ள ஒரு வேன் பயன்படுத்தப்படுவதும் தெரிய வந்தது. எந்த ஒரு வசதியும் இல்லாத இந்த வேனில், ஏழெட்டுப் பேரை ஸ்ட்ரெட்சருடன் ஏற்றி வைத்து அழைத்துச் செல்வதும், சில நேரங்களில் இந்த வேனுக்காக நோயாளிகள் காத்துக் கிடப்பதும், சில நேரம் ஏற்றிச் சென்ற நோயாளிகளை திரும்ப கொண்டு வராமல் அங்கேயே அமரவைப்பதும், நோயாளிகளே ஆட்டோவை வாடகைக்கு பிடித்து அங்கிருந்து வருவதும் என மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் கணேசன் கூறுகையில், ‘‘ பல லட்ச ரூபாய் செலவில் வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. நோயாளிகள் நலன் கருதி, இந்த பழுதடைந்த ஆம்புலன்ஸ்களை சீரமைப்பதுடன், கூடுதல் தேவைக்கு புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: