45 ஆண்டில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: மாயாவதி கவலை

லக்னோ: இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கவலை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என முந்தைய தேர்தலின்போது பாஜ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

மேலும் மோடியின் ஆட்சி நடைபெற்ற கடந்த 2017-18ம் ஆண்டில் 6.1 சதவீதம் அளவுக்கு, அதாவது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக தகவல் கசிந்தது. இந்த நிலையில் கடந்த மே 31ம் தேதி பிரதமராக மோடி 2வது முறையாக பதவியேற்ற மறுநாள் மத்திய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் அதிகளவு வேலையில்லா திண்டாட்டம் நிலவுவது தெரியவந்துள்ளது.

அதில், மொத்த தொழிலாளர்களில் நகர்ப்புறங்களில் 7.8 சதவீத இளைஞர்களும் கிராமப்புற பகுதிகளில் 5.3 சதவீதம் பேரும் வேலையில்லாமல் இருக்கின்றனர். மேலும் நாடு முழுவதும் வேலையில்லாத ஆண்கள் சதவீதம் 6.2 சதவீதம் ஆகவும், பெண்கள் 5.7 சதவீதம் பேரும் உள்ளனர். மேலும் கடந்த 2018 ஜனவரி முதல் 2019 மார்ச் வரையிலான காலத்தில் நாட்டின் பொருளதார வளர்ச்சி விகிதம் 5 ஆண்டுகளில் மிக குறைவாக 5.8 சதவீதமாக உள்ளதாகவும்’ குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மக்களவை தேர்தலுக்கு பின் மத்திய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

Related Stories: