கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் உஷார் நிலையில் தமிழகம்: எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு

சென்னை: நிபா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து தமிழக எல்லையோர மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பில்  கொண்டுவரப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. அதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டும் கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல், இறப்புகள் தொடர்கிறது.கேரளாவில் நிபா வைரஸ் அறிகுறிடன் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் நிபா வைரஸ் பாதிப்பை தவிர்க்க தமிழக சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பொது சுகதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது: நிபா வைரஸ் பழந்தின்னி வவ்வால் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. ஒரு வாரத்துக்கும் மேல் காய்ச்சல், வாந்தி, மயக்கம் ஆகியவை நிபா வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள். கொல்கத்தாவிலும், கடந்த ஆண்டு கேரளாவில் நிபா வைரஸ் தாக்கிய போது, மத்திய அரசு வழங்கிய வழிமுறைகளை பின்பற்ற டாக்டர்களை அறிவுறுத்தியுள்ளோம். தமிழகம் முழுவதும் நிபா வைரஸ் தாக்குதலுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக டாக்டர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

 

கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் உள்பட கேரளாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாவட்டங்களுக்கு சுகதாரத்துறை மூத்த மருத்துவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் கண்டறியப்படவில்லை. எல்லையோர மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதே போல், நிபா வைரஸ் தாக்குதலுக்கு சிசிக்சைக்கான முகமுடி உள்பட உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு செக் போஸ்ட்டிலேயே சோதிக்கப்படுகிறார்கள். நிபா பாதிப்பு அறிகுறிகளுடன் வருபவர்கள் செக்போஸ்ட்டுக்கு அருகாமையில் உள்ள அரசு மருத்துமவனைக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

மேலும் நிபா வைரஸ் குறித்த தகவல்களுக்கு 104 இலவச மருத்துவ ஆலோசனை எண்ணில் பொதுமக்கள் தொடர்புகொண்டு தகவல் பெறலாம். 044-24334811 கண்காணிப்பு அறையையும் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். நிபா வைரஸ் தொடர்பாகவும் முன்னெச்சரிக்கையாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று 2 எண்களில் பொதுமக்கள் கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கப்பட்டுள்ளது.

Related Stories: