பத்திரிகையாளர்கள் கோரிக்கையை ஏற்றுதான் பிரதமருக்கு கோரிக்கை...மும்மொழிக் கொள்கையை அரசு ஆதரிக்கவில்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி

கோவை: பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, குறுவை  சாகுபடிக்கு தேவையான தண்ணீரை கர்நாடகா அரசு திறக்கும் என்றும் நம்புவதாக தெரிவித்தார்.  முழுமையாக மழைப்பொழிவு இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனையை தீர்ப்பது பற்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட  ஆட்சியர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடுகளை கவனித்து நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை சரிசெய்து மக்களுக்கு  தடையில்லாமல் குடிநீர் வழங்க தேவையான நிதி ஒதுக்கப்பட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற கர்நாடக அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். தமிழகத்திற்கு நீர் திறக்க திமுக எம்.பி.க்கள் கர்நாடக அரசை வலியுறுத்துவார்கள்  என நம்புகிறேன் என்றார். வெளிமாநிலத்தில் வாழும் தமிழர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கோரிக்கையை ஏற்றுதான் தமிழ் மொழியை பிற மாநிலத்தவர் பயில வேண்டும் என்றே டுவிட்டரில் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்தேன்  என்றார். மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாக நான் எப்போது பேசினேன், மும்மொழிக் கொள்கையை நான் ஆதரிப்பதாக அரசியல் ஆதாயத்திற்காக தவறாக பரப்புகிறார்கள் என்றும் தெரிவித்தார். மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு  ஆதரிக்கவில்லை, இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இருமொழிக் கொள்கையை பின்பற்றியே அதிமுக ஆட்சி நடைபெறும் என்றார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து பெரும்பாலானவர்கள் விலகி விரைவில் அதிமுகவில் இணைவார்கள் என்றும் அதிமுகவிற்கு வருவர்களை இணைக்க நானும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தே  செயல்படுகிறோம் என்றார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது தனித்துப் போட்டியிட்டதால் அதிமுகவின் வாக்குவங்கி அதிகமானது என்றும் குறைவான தொகுதிகளில் போட்டியிட்டதால் அதிமுகவுக்கு வாக்குகள் குறைந்தன என்று  முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

Related Stories: