பிரதமராக பொறுப்பேற்ற மோடி முதல் முறையாக 8ம் தேதி மாலத்தீவு பயணம்: 9ம் தேதி இலங்கை செல்கிறார்

புதுடெல்லி: பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள மோடி நாளை மறுநாள் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை தொடங்குகிறார். மாலத்தீவு செல்லும் அவர் வரும் வழியில் இலங்கையிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது.

பிரதமராக மோடி மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலிக் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது மோடியை தங்கள் நாட்டுக்கு வருமாறு மாலத்தீவு, இலங்கை அதிபர்கள் இருவரும் அழைப்பு விடுத்தனர். இதை ஏற்ற மோடி, அண்டை நாடுகளுடன் நல்லுறவு என்ற அடிப்படையில் தனது முதல் வெளிநாட்டு பயணத்துக்கு அண்டைநாடான மாலத்தீவை தேர்வு செய்துள்ளார்.

அதன்படி வரும் 8ம் தேதி மோடி அங்கு செல்கிறார்.அங்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி அண்டை நாடுகளுடனான கொள்கை, வர்த்தகம், ராணுவ தகவல் பகிர்வு, தொழில்நுட்பம் ஆகியவை குறித்து பேசுவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து மாலத்தீவில் இருந்து திரும்பும் வழியில் 9ம் தேதி பிரதமர் மோடி இலங்கைக்கு செல்கிறார். அங்கு அதிபர் சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரை சந்தித்து பேசுகிறார். முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பொறுப்பேற்ற மோடி அண்டை நாடான பூட்டானுக்கு முதல் வெளிநாட்டு பயணம் சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: