கோட்டூர் அருகே மேலகண்டமங்கலத்தில் அடிப்படை வசதியின்றி இயங்கும் அரசு பள்ளியால் மாணவர்கள் அவதி

* கஜா புயலால் சேதமடைந்து 8 மாதமாகியும் கட்டிடங்கள் சீரமைக்கப்படாத அவலம்

மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் சேரி ஊராட்சி மேலகண்ட மங் கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1920 ம் ஆண்டு அரசு துவக்க பள்ளியாக தொடங்கப்பட்ட இந்த பள்ளி கடந்த 2008 ம் ஆண்டு முதல் தரம் உயர்த்தப்பட்டு நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. கோட்டூர் வட்டார கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கி வரும் இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள 70 மாணவ மாணவிகள் தற்போது கல்வி பயின்று வருகின்றனர். இம் மாணவர்களுக்காக தலைமையா சிரியர் உள்ளிட்ட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அடிப்படை வசதிகள் கூட இந்தப் பள்ளியில் இல்லாத அவலநிலை உள்ளது. எந்தவொரு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாத தால் இப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் வேதனையில் உள் ளனர்.

இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 15 ம் தேதி நள்ளிரவில் அடித்த கஜா புயலின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இப்பள்ளியில் 6, 7, 8 ம் வகுப்புகள் இயங்கும் கட்டிடங்கள் சேதமடைந்து விட்டன. மேலும் அக் கட்டிடங்களின் சிமெண்ட் மேற்க்கூரைகள் சேதமடைந்து எந்தநேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் அருகில் துவக்கப்பள்ளி செயல்பட்டு வந்த ஒட்டு கட்டிடத்தின் மேற்கூரைகள் சேதமடைந்து விட்டன. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் பலனில்லை.இதுநாள் வரையிலும் ஏழை, எளிய, 90 விழுக்காட்டிற்கு மேல் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் நல்வாழ்விற்கு ஒரு கதவும் திறக்கப்படாதது வேதனையே.

அரசு அதிகாரிகள் இப்பள்ளியின் பக்கம் தங்களின் கவனத்தை திருப்ப வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மேல கண்டமங்கலத்தை சேர்ந்த ரேகா கூறுகையில், மேலகண்டமங்கலம், மேலமருதூர் கிராமங்களை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் தான் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் வசதிக்காக ஒரு குடிநீர் தொட்டி கட்டப்பட்டு நீண்ட வருடமாக பயனற்று கிடக்கிறது. குடங்களில் குடிநீர் பிடித்து வைத்து அதனை தான் மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பள்ளியை சுற்றிலும் வயல்வெளிகள் இருப்பதால் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் பள்ளிக்குள் வருவது மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் நிலைமை படுமோசமாக உள்ளது. சுகாதாரமான கழிவறை வசதி கூட இல்லை. மேற்கூரை இல்லாத தண்ணீர் வசதி இல்லாத பாழடைந்த கழிவறை தற்போது உள்ளது. ஏற்கனவே போதிய அடிப்படை வசதிகள் இல்லாத இப்பள்ளி கஜா புயலின் கோரப்பிடியில் சிக்கி கட்டிடங்கள் சேதமடைந்து மாணவ, மாணவிகளின் உயிருக்கு ஆபத்தாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் எங்களின் பிரச்னையை கவனத்தில் கொண்டு இப்பள்ளியை நேரில் வந்து பார்வையிட்டு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடன் செய்து தர வேண்டும் என்றார்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், கஜா புயலால் மேல்கண்ட மங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி சேதமடைந்த செய்தியறிந்து கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகளும், கோட்டூர் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகளும் கடந்த ஜனவரி மாதம் அப்பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம். சேத விபரங்கள் கணக்கீடு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்ப பட்டுள்ளது. அங் கிருந்து நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வந்தவுடன் பள்ளியின் பிரச்சனைகள் சரி செய்யப்படும் எனக்கூறினர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கஜா புயல் சீரமைப்பிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எங்கே சென்றது. புயல் கடந்து 6 மாதங்கள் ஆகியும் பள்ளியை சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது நியாயமல்ல. எந்த அடிப்படை வசதியும் இல்லாத பள்ளியில் தினம்தோறும் எங்கள் குழந்தைகள் படும் வேதனையை அதிகாரிகள் உணர வேண்டும். எனவே கல்வி மற்றும் ஊராட்சி துறை அதிகாரிகள் சேதமடைந்த பள்ளியை நேரில் வந்து பார்வையிட்டு சேதமடைந்த கட்டிடங்கள் சீரமைத்து பள்ளிக்கு தேவையான அடைப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மிகப்பழமையான இப்பள்ளி நிரந்தரமாக மூடப்படுவதற்கு அதிகாரிகளே காரணமாக அமைந்து விட கூடாது என கூறினர்.

Related Stories: