ஆபரணங்கள் ஏற்றுமதி சரிவு

புதுடெல்லி: நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 5.32 சதவீதம் சரிந்துள்ளது என நவரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி  மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்த கவுன்சில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2018-19 நிதியாண்டில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரண  ஏற்றுமதி 3,096 கோடி டாலராக இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டு இது 3,270 கோடி டாலராக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி 5.32  சதவீதம் சரிந்துள்ளது.  நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் நகை ஆபரண துறையின் பங்களிப்பு 15 சதவீதம். வேலை வாய்ப்பும் இந்த துறையில்  அதிகம். இருப்பினும், கடந்த நிதியாண்டில் வெள்ளி பொருட்கள், ஆபரணங்கள், நவரத்தினங்கள், பட்டை தீட்டாத வைரங்கள், தங்கக்காசு ஏற்றுமதி  வெகுவாக சரிந்துள்ளது. இதுவே சரிவுக்கு காரணம்.

அதேநேரத்தில் பட்டை தீட்டிய வைரங்கள் ஏற்றுமதி சற்று உயர்ந்து 2,382 கோடி டாலராகவும்,  தங்க ஆபரண ஏற்றுமதி 24.2 சதவீதம் உயர்ந்து 1,200 டாலராகவும் ஆகியுள்ளது. இதுபோல், நவரத்தினங்கள், ஆபரணங்கள் இறக்குமதி 16.17 சதவீதம், பட்டை தீட்டாத வைரங்கள் 16.75 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால்,  தங்கக்கட்டிகள் இறக்குமதி 38.26 சதவீதம் உயர்ந்து 787 கோடி டாலராக உள்ளது என புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: