கோவா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 4ம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு

பனாஜி: கோவா சட்டப்பேரவைக்கு புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்க ஜூன் 4ம் தேதி சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக தற்காலிக சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்தார். கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு பின், சபாநாயகராக இருந்த பிரமோத் சாவந்த் அங்கு முதல்வராக பொறுப்பேற்றார்.

இதையடுத்து, துணை சபாநாயகராக இருந்த மைக்கேல் லோபோ தற்காலிக சபாநாயகராக இருந்து வருகிறார். இந்நிலையில், புதிய சபநாயகரை தேர்ந்தெடுக்க வரும் 4ம் தேதி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடத்தப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. லோபோ கூறுகையில், பாஜ எம்எல்ஏ விஷ்வஜித் ராணே மீதான தகுதி நீக்க வழக்கில் வரும் 4ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும். இது குறித்த விசாரணைகள் முடிந்து சட்ட ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சட்டரீதியான கருத்து பெறப்பட்டதும் தகுதி நீக்க வழக்கில் எந்நேரமும் தீர்ப்பு அளிக்கப்படும். பின்னரே, புதிய சபாநாயகரைத் தேர்வு செய்வதற்கான சிறப்பு கூட்டம் நடத்தப்படும். அதே போன்று, பாஜ எம்எல்ஏக்கள் மனோகர் அஜ்காவோங்கர், தீபக் பவாஸ்கர் எதிரான தகுதி நீக்க வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. விரைவில் அவர்கள் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும்,’’ என்று கூறினார்.

காங்கிரசில் இருந்து கட்சி தாவிய விஷ்வஜித் ராணேவுக்கு எதிராக சுயேச்சை எம்எல்ஏ பிரசாத் காவோங்கரும், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியில் இருந்து பாஜ.வுக்கு மாறிய எம்எல்ஏ.க்கள் மனோகர் அஜ்காவோங்கர், தீபக் பவாஸ்கரை தகுதி நீக்கம் செய்ய கோரி மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி எம்எல்ஏ சுதின் தாவாலிகரும் மனு அளித்தனர்.

Related Stories: