பவானி சங்கமேஸ்வரர் கோயில் யானைக்கு புனே மருத்துவக்குழுவினர் சிகிச்சை

பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோயில் சுமார் 47 வயதான பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு நேற்று புனேவை சேர்ந்த சிறப்பு கால்நடை மருத்துவர் ராமநாதன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் குழந்தைசாமி, பவானி கால்நடை துறை உதவி இயக்குனர் மருத்துவர் சேகர் கொண்ட குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். சுமார் 3,000 கிலோ எடை கொண்ட பெண் யானை வேதநாயகிக்கு கால்களில் ஏற்பட்ட பாதிப்பை போக்கும் வகையிலும், கோடை வெயிலை சமாளிக்கும் வகையிலும் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. யானையின் கால்களை பரிசோதிக்க முதலில் தரையில் படுக்க வைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிந்த பின்னர் யானை எழ முடியாமல் சிரமப்பட்டதால் கிரேன் வரவழைக்கப்பட்டு தூக்கி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து யானையின் காலுக்கு மருந்துகள் கொண்ட உறை அணிவிக்கப்பட்டு ஒவ்வொரு காலிலும் ஒரு மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இரு வாரங்களுக்கு, வாரம் இரு முறை சிறப்பு மருந்துகள் கொண்ட உறை அணிவிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இதில் காணப்படும் முன்னேற்றத்தை கொண்டு மேல் சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்படும். வயதின் முதிர்வால் பெண் யானை வேதநாயகி மேல் வரிசை பல் ஒன்று ஏற்கனவே விழுந்துவிட்டது. இதனால் யானை உணவு உண்பதில் சிரமம் இருந்து வந்தது. வழக்கமாக காட்டு யானைகளுக்கு பல் விழுவது மீண்டும் முளைப்பதும் தொடர்ந்து நடந்து வரும். ஒரு யானைக்கு 6 முறை பல் விழுந்து முளைக்கும். தற்போது வேதநாயகி மீண்டும் பல் முளைத்து உள்ளதால் உணவு உண்பதில் ஏற்பட்டுள்ள சிரமம் நீங்கியுள்ளது. இதனால் தற்போது யானைக்கு தேவையான அனைத்து வகை உணவு வகைகளும் ஊட்டச்சத்து மற்றும் தானிய வகைகளும் உணவாக வழங்கப்பட்டு வருகிறது. வழக்கத்தை விட உற்சாகமாக காணப்பட்டு வரும் வேதநாயகிக்கு காலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விரைவில் குணமடையும் என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: