எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வென்ற தொகுதியை கைப்பற்றிய திமுக: அரசியல் களத்தில் தம்பியை வீழ்த்தி ஆண்டிபட்டியை வென்ற அண்ணன்

ஆண்டிபட்டி: எம்ஜிஆர், ஜெயலலிதா வென்ற பெருமை பெற்ற  ஆண்டிபட்டி தொகுதியில், சொந்த தம்பியை வீழ்த்தி திமுக வேட்பாளர் அசத்தல் வெற்றி பெற்றுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, விஐபிக்களின் தொகுதி என பெயர் பெற்றது. அதிமுகவின் கோட்டையாக விளங்கும் இத்தொகுதியில் கடந்த 1984ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 2002, 2006ல் ஜெயலலிதா நின்று வெற்றி பெற்றார். மேலும், இத்தொகுதியில் அதிமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் 2001, 2011, 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் வென்றுள்ளார். இவர் டிடிவி அணிக்கு சென்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடந்தது. தங்கதமிழ்செல்வன் தேனி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக ஜெயக்குமார் களமிறங்கினார். திமுக வேட்பாளராக மகாராஜன் (65) களமிறங்கினார். அதிமுக சார்பில் இவரது சொந்தத்தம்பியான லோகிராஜன் நிறுத்தப்பட்டார். இது ஆண்டிபட்டி தேர்தல் களத்தை பரபரப்பாக்கியது.

இத்தேர்தலில் தமிழகத்திலேயே அண்ணன் - தம்பி நேரடி மோதல் ஆண்டிபட்டியில் மட்டும் நடந்ததால் யார் வெல்வார் என பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. மகாராஜன் திமுகவின் தீவிர விசுவாசி. 4 முறை ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். 1992ல் ரெங்கசமுத்திரம் கூட்டுறவுத்துறை  தலைவராகவும் 1996ல் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய சேர்மனாகவும் இருந்தவர். 35 ஆண்டுகளாக பொதுப்பணித்துறையில் ஒப்பந்தக்காரராக உள்ளார். நீயா, நானா என ஒரே குடும்பத்தில் எழுந்த போட்டியில் கடைசியில் மகாராஜன் வெற்றி பெற்று அசத்தி உள்ளார். இதன்மூலம் ஆண்டிபட்டியை திமுக  தன்வசப்படுத்தி உள்ளது. அதிமுக கோட்டை என கூறப்பட்ட தொகுதியை திமுக அசைத்து சாதனை வெற்றி பெற்றுள்ளது. சொந்தத் தம்பியை தோற்கடித்தது குறித்து மகாராஜன் கூறுகையில், ‘‘எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கோட்டை என்று அதிமுகவினர் கூறிவந்தனர். மக்களின் தீர்ப்பால் அதனை உடைத்து திமுக கைப்பற்றி உள்ளது. குடும்பத்தை பொறுத்தவரை அவர் (லோகிராஜன்) எனது சகோதரர். நாங்கள் ஒற்றுமையாகத்தான் உள்ளோம். கட்சி என்று வந்து விட்டால் திமுகவுக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பேன். அந்த அடிப்படையில்தான் எனக்கு தலைமை சீட்டு வழங்கியது. தம்பியும் அதிமுகவின் தீவிர விசுவாசிதான். அவரும் சளைக்காமல் போராடினார். ஆனால், திமுக தலைவரின் பிரசாரமும், நாங்கள் வகுத்த வியூகமே வெற்றிக்கனியை எனக்கு பெற்றுத்தந்தது’’ என்றார்.

Related Stories: