17வது மக்களவைக்காக மொத்தம் 76 பெண் எம்.பி.க்கள் தேர்வு: தமிழகத்திலிருந்து 3 பெண் எம்.பி.க்கள் டெல்லி செல்கின்றனர்!

சென்னை: மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மொத்தம் 76 பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதிலும், தமிழகத்திலிருந்து 3 பெண் எம்.பி.க்கள் டெல்லி செல்லவுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிலையில், 17வது மக்களவைக்காக 76 பெண் எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. முதல் மக்களவை தேர்தல் நடந்ததில் இருந்து, பெண்களின் வெற்றி எண்ணிக்கை இதுவே அதிகமாகும்.

மொத்தமுள்ள 542 தொகுதிகளில் சுமார் 14 சதவீதம் அளவிற்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த மக்களவை தேர்தலில் மொத்தம் 66 பெண் எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் இருந்து தலா 11 பெண் எம்பிக்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இத்தேர்தலில் 47 பெண்களை பாஜக களமிறக்கியது. இதில் 34 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட நான்கு பெண்களும் இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து 3 பேர்!

இந்த நிலையில் தமிழகத்திலிருந்து 3 பெண் எம்பிக்கள் டெல்லிக்கு செல்லவுள்ளனர். அவர்களில் திமுகவை சேர்ந்த கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் காங்கிரஸின் ஜோதிமணி ஆகியோர் டெல்லி செல்கின்றனர். தூத்துக்குடியில் பாஜக தமிழக தலைவர் தமிழிசையை எதிர்த்து போட்டியிட்ட, திமுக எம்.பி. கனிமொழி, 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், தென் சென்னை மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் ஜெ.ஜெயவர்தன் உள்பட 40க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட, தமிழச்சி தங்கபாண்டியன் 5,64,872 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இவர் தனக்கு அடுத்த இடத்தில் வந்த அதிமுக வேட்பாளரான ஜெயவர்த்தனை விட 2,62,223 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். கரூர் மக்களவை தொகுதிளில் 4 முறை வென்றுள்ள தம்பிதுரை உள்பட 42 வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, சுமார் 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். எனவே தமிழகத்தில் எம்.பி.க்களாக தேர்ந்தெக்கப்பட்டுள்ள இம்மூவரும் 17வது மக்களவைக்காக டெல்லி செல்லவுள்ளனர். தமிழக பெண் எம்.பி.க்கள் மூவருமே திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: