தோசை சாப்பிட அடம்பிடித்த சிறுவனை கரண்டியால் அடித்து கொலை செய்த தாய் : அம்பத்தூரில் கொடூரம்

சென்னை: சென்னை அம்பத்தூரில் தோசை சாப்பிட அடம்பிடித்த மூன்றரை வயது சிறுவனை தோசை கரண்டியால் அடித்தும் காலால் மிதித்தும், கொடூரமாக கொலை செய்த தாயையும், தாயின் இரண்டாவது கணவனையும் காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருக்கு 14 வயதான சிறுமி புவனேஸ்வரியை 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், கருத்து வேறுப்பாட்டால் சோமசுந்தரம் மனைவியை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சென்ட்ரிங் தொழியாளியான கார்திகேயனுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வந்துள்ளார் புவனேஸ்வரி. இந்த நிலையில் புவனேஸ்வரியின் முதல் கணவனுக்கு பிறந்த மகனான 3 வயதான சிறுவன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான்.

Advertising
Advertising

அவனை அழைத்து சாப்பிடும் படி கூறியுள்ளார். தோசை சாப்பிட அடம் பிடித்த சிறுவன் விளையாடுவதற்கு வீதியை நோக்கி ஓடியுள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த புவனேஸ்வரி தனது மகனை தோசைக் கரண்டியால் சரமாரியாக தலையில் தாக்கியதோடு காலால் மிதித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் மயங்கி சரிந்துள்ளான். அவனை சிகிச்சைக்காக மூன்று தனியார் மருத்துவமனைகளுக்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்ததாக கூறப்படுகின்றது. இதை அடுத்து, பெற்ற மகனை அடித்து கொலை செய்த தாய் புவனேஸ்வரியையும்,இரண்டாவது கணவர் கார்த்திகேயனையும் காவல் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

உணவு சாப்பிட அடம் பிடித்ததால் அடித்ததாக புவனேஸ்வரி தெரிவித்த நிலையில், இருவரது குடும்ப வாழ்க்கைக்கும் சிறுவன் இடையூறாக இருப்பதாக கருதி அடித்து கொல்லப்பட்டானா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.  திருச்சி மாவட்டம் முசிறி அருகே சரியாக படிக்கவில்லை என்று சிறுமி அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், தனது மனைவி மற்றும் இரண்டாவது கணவன் மீது முதல் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. கள்ளம் கபடம் இல்லா குழந்தைகள் விளையாட்டுத் தனமாக செய்யும் குறும்புகளை பொறுத்துக் கொள்ளாமல் அடித்து தாக்கி துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும் என்பதை காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.  

Related Stories: