இதுவரை நடந்த மக்களவை தேர்தல்களில் 2019ல் அதிகபட்சமாக 67.11% வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: இதுவரை நடந்த பொதுத் தேர்தல்களில் 17வது மக்களவைத் தேர்தலில்தான் அதிகபட்சமாக 67.11 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்தது. வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், 7 கட்ட தேர்தலில் எவ்வளவு வாக்குகள் பதிவானது என்பது பற்றி தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது. அதில் கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி, இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களில், இந்த தேர்தலில்தான் அதிகபட்சமாக 67.11 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு 66.40 சதவீத வாக்குகள் பதிவானது. கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு 56.9 சதவீதமாக இருந்தது.

இந்த மக்களவை தேர்தலில் மொத்தம் 90.99 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். கடந்த 2014 தேர்தலில் இது 83.40 கோடியாக இருந்தது. இந்த தேர்தலில், முதல்கட்ட வாக்குப்பதிவில் 69.61 சதவீத வாக்குகள் பதிவானது. 2ல் 69.44, 3ல் 68.40, 4ல் 65.50, 5ல் 64.16, 6ல் 64.40, 7வது கட்ட வாக்குப்பதிவில் 65.15 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது மபி.யில் கூடுதலாக 5.92 சதவீதமும் இமாச்சலில் 5.1 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதேபோல், சண்டிகர், பஞ்சாபில் முறையே 10.27, 5.64 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. ஒட்டு மொத்தமாக பிற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு 2.5% அதிகரித்துள்ளது.

Related Stories: