தேர்தல் கருத்து கணிப்புகள் பலமுறை தோல்வியடைந்துள்ளன: கேரள முதல்வர் பினராய் விஜயன் பேட்டி

திருவனந்தபுரம்: தேர்தல் கருத்து கணிப்புகள் பலமுறை தோல்வியடைந்துள்ளன என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறினார். இங்கிலாந்து உட்பட சில வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த கேரள முல்வர் பினராய் விஜயன் நேற்று திருவனந்தபுரம் திரும்பினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் கணிப்புகள் எல்லாம் வெற்றி பெறும் என்று கூற முடியாது. பலமுறை கணிப்புகள் தோல்வியடைந்துள்ளன. 2004ல் மத்தியில் பாஜ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் அவற்றை எல்லாம் பொய்யாக்கும் வகையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. தேர்தல் முடிவுகள் குறித்து இப்போது யூகமாக எதையும் கூற முடியாது. 23ம் தேதிவரை பொறுத்திருந்து பார்க்கலாம். கேரளாவில் இடதுமுன்னணி அதிக இடங்களை கைப்பற்றும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

சபரிமலை விவகாரம் தேர்தல் முடிவுகளை எந்த விதத்திலும் பாதிக்காது. சபரிமலையில் நடக்கக் கூடாதது நடந்ததன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும். இப்போது அவர்களுக்கு இடையே பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. ஆசாரங்களை பாதுகாப்பதற்காக அவர்கள் போராடவில்லை. சபரிமலை போராட்டங்களின் பின்னணியில் வேறு லட்சியங்கள் இருந்தன என்று ஒரு இந்து அமைப்பை சேர்ந்த பெண் கூறியுள்ளார். சபரிமலை கோயிலை பாதுகாக்கும் நடவடிக்கைகளைதான் கேரள அரசு செய்து வருகிறது. சபரிமலையில் தற்போது பல்வேறு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த சீசனுக்குள் சபரிமலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. அதற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் அமைப்பு துறைகளையும் பாஜ தனது கட்டுக்குள் கொண்டு வர முயல்வது துரதிருஷ்டவசமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: