சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு அதிமுக கட்சி ெபாறுப்பில் இருந்து விலகுகிறேன்: தோப்பு வெங்கடாசலம் எம்எல்ஏ பரபரப்பு பேட்டி

சேலம்: ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளரும், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கருப்பணனுக்கும், முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான தோப்பு வெங்கடாசலத்திற்கும் பனிப்போர் நிலவிவருகிறது. சமீப காலமாக பெருந்துறை தொகுதியில் கருப்பணன் தனியாக கோஷ்டி சேர்ப்பது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெருந்துறை அதிமுக., எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாசலம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் மீது நடவடிக்கை எடுக்க கூறி முதல்வருக்கு கடிதம் எழுதினார். ஆனால், அமைச்சர் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், தனது கட்சி பதவி அனைத்தையும் ராஜினாமா செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் தோப்பு வெங்கடாசலம் கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றி ஈரோட்டில் நேற்று காலை டிவிக்கு அவர் பேட்டியளித்தார். இந்த செய்தி வெளியானதும் உடனடியாக அவருடன் அதிமுக மாநில இளைஞர் பாசறை செயலாளர் வைகைச்செல்வன் தொடர்பு கொண்டு சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வரும்படி சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

இதையடுத்து நேற்று மாலை காரில் சேலம் வந்த தோப்பு வெங்கடாசலம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மாலை 5மணி முதல் 6.45 மணி வரை, முதல்வர் வீட்டில் ஆலோசனை நடத்தினார். அப்போது வைகைச்செல்வனும் உடன் இருந்துள்ளார். பின்னர் வெளியே வந்த தோப்புவெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ஈரோடு மாவட்ட ேதர்தல் பொறுப்பாளராக ஜெயலலிதா என்னை அறிவித்தார். கடுமையாக பாடுபட்டு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றியை பெற்றுக்கொடுத்தேன். வேறு எந்த மாவட்டத்திலும் அதிமுக மொத்த தொகுதிகளையும் தக்கவைக்கவில்லை. தற்போது பல்வேறு சூழல்களால் கட்சி பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இதற்கான கடிதத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியுள்ளேன். அந்த கடிதத்தை ஏற்பதா? வேண்டாமா? என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். கடந்த சட்டமன்றத்தேர்தலின் போது, ஜெயலலிதாவின் பிரசார வாகனம், எனது வீட்டில் தான் ஒருவாரம் நின்றது. தமிழகத்திற்கான அதிமுக தேர்தல் அறிக்கையை பெருந்துறையில்தான் ஜெயலலிதா வெளியிட்டார். முதல் பிரசாரத்திற்கு அவர் புறப்பட்ட போது, எனது மனைவிதான், அவருக்கு ஆரத்தி எடுத்து அனுப்பி வைத்தார். அப்படிப்பட்ட உண்மை தொண்டனாக அதிமுகவில் இருந்தவன் நான். மீண்டும் சொல்கிறேன். தற்போதைய சூழ்நிலைகள் காரணமாகவே கட்சி பொறுப்புகளில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனால் அந்த காரணங்களை சொல்ல நான் விரும்பவில்லை. இப்படி விலகுவதால் எனக்கு மன உளைச்சலும் கிடையாது. சந்தோஷமும் கிடையாது. மந்திரி பதவியை எதிர்பார்த்து  இந்த ராஜினாமா முடிவா? என்று நீங்கள் கேட்பதற்கு என்னால் கருத்து சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் மாற்றுக்கட்சியில் இணைய வாய்ப்புள்ளதா? திமுகவில் இணையப் போவதாக பேச்சுக்கள் வருகிறதே? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த தோப்பு வெங்கடாசலம், சிரித்துவிட்டு, கும்பிட்டவாறே சென்றார். பின்னர் அங்கிருந்து காரில் ஈரோடு புறப்பட்டு சென்றார். ஏற்க மறுப்பு: வைகைச்செல்வன் நிருபர்களிடம் கூறுகையில், தோப்பு வெங்கடாசலம் ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஏற்கவில்லை. பல்வேறு பொறுப்புகள் உங்களை தேடி வரும். அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சி பணியாற்ற வேண்டும் என்பது எனது மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் விருப்பம் என்று தெரிவித்ததாக கூறினார்

முதல்வரின் சமாதானத்தை ஏற்காத தோப்பு வெங்கடாசலம்

அதிமுகவில், தான் வகித்து வரும் மாநில ஜெ.பேரவை இணைச்செயலாளர் ெபாறுப்பில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை வழங்க தமிழக முதல்வரின் சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டிற்கு தோப்பு வெங்கடாசலம் எம்எல்ஏ, மாலை 5 மணிக்கு வந்தார். அப்போது கார் டிரைவர் மட்டுமே அவருடன் வந்திருந்தார்.  சில நிமிடங்களில் அதிமுக மாநில இளைஞர் பாசறை செயலாளர் வைகைச்செல்வன், நாமக்கல் எம்பி சுந்தரம் ஆகியோர் முதல்வர் இல்லத்திற்கு வந்தனர். சுமார் 1.45 மணி நேரம் கழித்து 6.45 மணிக்கு தோப்பு வெங்கடாசலம் மட்டும் தனியாக வந்து நிருபர்களை சந்தித்தார். முன்னதாக முதல்வரிடம் பேசியவர், கட்சியில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை வேதனையுடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதையெல்லாம் கேட்ட முதல்வர், தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தியதோடு, சில உறுதிகளையும் அளித்துள்ளார். ஆனால் அதனை ஏற்க தோப்பு வெங்கடாசலம் மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

Related Stories: