ஓபிஎஸ் மகன் டெபாசிட் வாங்கவே மறுவாக்குப்பதிவு: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி

ஆண்டிபட்டி: தேனி மக்களவை மற்றும்  ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் மறுவாக்கு பதிவு பாலசமுத்திரத்தில் கம்மவர் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள 67வது வாக்குச்சாவடி மையத்தில் நேற்று நடைபெற்றது. இம்மையம்  1,255 வாக்குகளைக் கொண்டது. கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் 1023 வாக்குகள் பதிவானது. இந்நிலையில், வாக்குப்பதிவு மையத்தை தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் நேற்று பார்வையிட்டார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  ‘‘இந்த வாக்குச்சாவடி மையத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று எந்த கட்சியும் கோரவில்லை. அப்படி இருக்கையில் எதற்காக மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது என்றால், இந்த தேர்தலில் அதிமுக எப்படியாவது டெபாசிட் வாங்கிவிட வேண்டும் என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்திரநாத் குமாரும்  முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

 

எத்தனை முறை மறுவாக்குப்பதிவு நடந்தாலும் ஓபிஎஸ்சின் மகன் வெற்றி பெற முடியாது. ஓபிஎஸ் இந்த மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தாலும், மக்களுக்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை. பணபலத்தை நம்பி அதிமுக தேர்தலை சந்தித்து வருகிறது. இது அவர்களுக்கு பெரும் வீழ்ச்சியைத் தரும். மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு பிரதமராக ராகுல் காந்தியும், தமிழ்நாட்டில் முதல்வராக மு.க.ஸ்டாலினும் பதவியேற்பார்கள்’’ என்றார்.

Related Stories: