பரபரப்பான நிலையில் இன்று 4 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?: சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் சிக்கல்

சென்னை: தமிழக பேரவையில் அதிமுகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், காலியாக உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் இன்று நடைபெறும் 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம், தமிழகத்தில் மொத்தம் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்தது. அதில் 18 இடங்களுக்கு கடந்த ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மேலும் 4 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அதிமுகவுக்கு இந்த 22 தொகுதிகளில் குறைந்தபட்சம் 9 அல்லது 10 இடங்களில் வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. ஆனால் நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதிகளில் 4 இடங்களில்தான் அதிமுக வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதனால், இன்று நடைபெறும் அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் ₹2 ஆயிரம் முதல் ₹5 ஆயிரம் வரை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று, டி.டி.வி.தினகரனும் தன் கட்சியின் செல்வாக்கை நிரூபிக்க இந்த தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். அவரும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

ஆனால், அதிமுக ஆட்சியால் தமிழக மக்கள் பல பிரச்னைகளை அனுபவித்து வருவதாக கூறுகிறார்கள். குறிப்பாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சி செய்வது, விவசாய கடனை ரத்து செய்ய மறுத்து வருவது, தஞ்சாவூர் மற்றும் டெல்டா பகுதியில் கஜா புயல் பாதிப்பில் போதிய நிவாரணம் கிடைக்கவில்லை, பிரதமர் மோடி வந்து பார்க்காதது, மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வர முயற்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போனது, ஜிஎஸ்டி வரியால் சிறு குறு தொழில்கள் பாதிப்பு என தொடர்ந்து தமிழகத்திற்கு விரோதமாக மத்திய அரசு நடந்து வருகிறது. இதை ஆளும் அதிமுக அரசும் எதிர்க்காமல், பிரதமர் மோடிக்கு ஆதரவு அளித்து வருவது மக்களிடம் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று பொதுமக்களும் நினைக்கிறார்கள். அதனால் இந்த 4 தொகுதி தேர்தலில் தங்கள் வாக்குகள் மூலம் ஆளும் மத்திய, மாநில அரசுக்கு பதில் அளிக்க திட்டமிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கூட, முதல்வர் எடப்பாடி கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி செய்த சாதனைகளை கூறி வாக்கு கேட்கவில்லை. மாறாக, மோடி மீண்டும் பிரதமர் ஆனால் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வர முடியும் என்கிறார். சில அமைச்சர்கள், மோடி தான் எங்களுக்கு டேடி என்று பேசினர்.

கடந்த 5 ஆண்டு ஆதரவு கொடுத்தபோதே ஒரு திட்டமும் கொண்டு வர முடியாமல், தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களைதான் மத்திய அரசு தமிழக மக்களுக்கு செய்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் எப்படி தமிழகத்துக்கு நல்லது கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கேள்வி எழுப்பினர். இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில்தான் இன்று 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் அதிகாரத்தையும் இந்த 4 தொகுதி மக்கள் அளிக்கபோகும் வாக்கில்தான் உள்ளது என்பதால் இன்று நடைபெறும் இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூறும்போது, இந்த 4 தொகுதி மக்கள் மீண்டும் அதிமுகவுக்கு வாக்களித்தால் தமிழகத்தை இன்னும் 30 வருஷத்துக்கு பின்நோக்கி அழைத்து சென்றுவிடும் என்றும் எச்சரித்துள்ளனர். இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில் இன்று நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க அப்பகுதி மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டார்கள். இதன் அடிப்படையில், தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவே அரசியல் நிபுணர்களும் கருதுகிறார்கள்.

Related Stories:

>