டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: “டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உயர் கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்ஏ ஆங்கிலம் இறுதியாண்டு பயின்ற வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ரிஷி ஜோஸ்வா தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற துயரச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பெற்றோருக்கு எனது அனுதாபத்தையும் ஆறுதலையும் கூறிக் கொள்கிறேன். டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த தமிழக மாணவர் சரவணனும், டெல்லி பல்கலை கழக மருத்துவ கல்லூரியில் பயின்ற சரத் பிரபுவும் ஏற்கனவே மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். அவ்வாறு நடைபெற்ற மர்ம மரணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, உண்மையைக் கண்டறிந்து, தமிழக மாணவர்களின் மத்தியில் நிலவும் மனரீதியான குழப்பத்தையும் அச்சத்தையும் போக்குவதற்கு மத்தியில் உள்ள பாஜக அரசும் முன்வரவில்லை.

Advertising
Advertising

இங்குள்ள மாணவர் விரோத அதிமுக அரசும் அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆகவே டெல்லிக்கு கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்கள் ஏதாவது ஒரு வகையில் துன்புறுத்தப்பட்டு-மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு, தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்வது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. உயர் கல்வி பயில தங்கள் பிள்ளைகளை அனுப்பி விட்டு அவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் தினந்தோறும் பயத்தில் மன நிம்மதி இழந்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. வெளி மாநிலங்களில் கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை அமைப்பு ரீதியாக உறுதி செய்வதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் பல முறை நான் வலியுறுத்தியும் இந்த அரசு அலட்சியமாக இருக்கிறது. இதன் விளைவாக நாட்டின் இளைஞர்களாகிய மிகப்பெரிய செல்வங்கள் ஒவ்வொருவராக நாம் இழக்கும் துரதிர்ஷ்டவசமான சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என்ற விஷம பிரசாரம் நடை பெறுகின்ற நேரத்தில் தமிழக மாணவர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்திட வேண்டியது மிக முக்கியமாகும். ஆகவே டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உயர் கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: