தாழ்த்தப்பட்டவர் என கூறி வெளியேற்றியதால் திருவாரூர் கோயில் கோபுரத்தில் ஏறி சிவனடியார் தற்கொலை முயற்சி

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் தேவாரம் பாடிய சிவனடியார்  தாழ்த்தப்பட்டவர் என்பதால் கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் கோயில் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயில் சைவசமயத்தின் தலைமை பீடமாகவும், முக்தியளிக்கும் தலமாகவும் இருந்து வருகிறது. திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானை சேர்ந்த முத்தரசன் (34) என்பவர் இந்த கோயிலில் சிவத்தொண்டு செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள மூலவரான வன்மீகநாதர் சன்னதியில் அமர்ந்து தேவாரம் பாடியதாக கூறப்படுகிறது. இதனை கண்ட கோயிலின் அர்ச்சகர் ஒருவர் இந்த இடத்தில் நீ வந்து தேவாரம் பாட கூடாது என அவரை வெளியேறும்படி கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே கோயில் ஊழியர் ஒருவர் மூலம் சிவனடியார் கோயிலை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதால், தேவாரம் பாட அனுமதி மறுக்கப்படுகிறது என்றும், தனக்கு ஏற்பட்ட அவமானம் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்றும் கூறி சிவனடியார் முத்தரசன் நேற்று கோயிலின் மேற்கு கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். தகவலறிந்த திருவாரூர் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிவனடியாரை சமாதானம் செய்து கீழே இறக்கினர்.

இதனையடுத்து சிவனடியாரை தரக்குறைவாக பேசியும், கோயிலை விட்டும் வெளியேற்றிய அர்ச்சகர் மற்றும் ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் கோயிலில் தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக சிவனடியார் வெளியேற்றப்பட்டதையடுத்து அவர் தற்கொலைக்கு முயன்ற  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: