இலங்கையில் 258 பேரை பலி வாங்கிய வெடிகுண்டு தாக்குதல் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ள பள்ளி முதல்வர், ஆசிரியர் கைது

கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய பள்ளி முதல்வர், ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் தின கொண்டாட்டத்தின்போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தற்கொலை படையினர் குண்டுகளை வெடிக்க செய்தனர். இதில் ஒரு பெண் உள்பட 9 பேர் தற்கொலை படை தீவிரவாதிகளாக செயல்பட்டனர். இந்த தாக்குதலில் 258 பேர் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இலங்கை பிரிவான தேசிய தவ்ஹீத் ஜமாத் பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதலில் தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் அதன் தலைவர் முகமது சஹ்ரான் ஹாசிம் ஆகியோருடன் சிலருக்கு தொடர்பு இருப்பதாக இலங்கை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக கடந்த வியாழக்கிழமை சிறப்பு அதிரடிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தி ஹாரோவ்பத்னா பகுதியில் பதுங்கியிருந்த பள்ளி முதல்வர் நூர் முகமது அட்டு உல் (56) மற்றும் பள்ளி ஆசிரியர் அஜிபுல் ஜபார் (47) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் கபுகொல்லேவா மற்றும் ஹாரோவ்பத்னா பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.  நூர் முகமது அதவீரவேவா பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று கேபிதிகோலேவா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் வீடுகள் வணிக நிறுவனங்கள் மற்றும் மசூதிகளும் தாக்கப்பட்டன. முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 70 பேரை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: