நாளை நடக்கும் இடைத்தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: இரா.முத்தரசன் அறிக்கை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் 19ம் தேதி (நாளை) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிகளின் ஆதரவுள்ள திமுக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் மிக தவறான பொருளாதார கொள்கையால் நாடு முன் எப்போதுமில்லாத வகையில் கடும் நெருக்கடிக்குள்ளாகி விட்டது. நாட்டின் தற்சார்பு தொழில்கள் அழிந்து வருகிறது.

நாடு கடந்த நிறுவனங்கள் நாட்டை சூறையாட, கதவுகள் திறந்து விடப்படுகிறது. வேலையின்மை, விலைவாசி உயர்வு தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியல் சாசனம் மற்றும் நமது சிறப்பிற்குரிய பன்முகம் கேள்விக்குறியாகிவிட்டது. இத்தகைய மத்திய அரசுக்கு தமிழ்நாட்டில் அப்பட்டமாக துணைபோகும் அரசாக எடப்பாடி அரசு செயல்படுகிறது. காவிரிநீர், மீத்தேன், ஹேல் கேஸ் திட்டம், ஸ்டெர்லைட், சேலம் எட்டுவழிச்சாலை என  தமிழக நலனுக்கு எதிரான மத்திய அரசின் கொள்கை நிலைகளையும், நிர்வாக முறைகளையும் தமிழக அரசு ஆதரிக்கின்றது. தமிழ்நாட்டின் ஆட்சி உரிமைகளிலும், நிர்வாக செயல்பாடுகளிலும், ஆளுநரின் தலையீடுகள் மவுனமாக வரவேற்கப்படுகிறது.

எதிர்கட்சிகள், எதிர் கருத்துகளை கூறினால் பல்வேறு முனைகளில் அச்சுறுத்தப்படுகிறார்கள். அமைச்சர்களே மிரட்டும் போக்கு தொடர்கிறது. ஊழல், நிர்வாக சீர்கேடுகள் என அரசு செயலிழந்து கிடக்கிறது. தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடே, தமிழக அரசின் நிர்வாக திறன் இன்மையை படம் பிடித்துக் காட்டுகிறது. எனவே தமிழகத்தின் ஜனநாயக மாண்புகளையும், உரிமைகளையும் காத்திட, மக்கள் விரோத அரசை வீழ்த்திட தமிழக மக்கள் நல்லதோர் தீர்ப்பை வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Related Stories: