பஞ்சாப்பில் காங்கிரஸ் தோல்வியடைந்தால் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் : முதல்வர் அமரிந்தர் சிங்

சண்டிகர் : பஞ்சாப்பில் காங்கிரஸ் தோல்வியடைந்தால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் நாளை மறுநாள் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனால் அரசியல் கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெறுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அம்மாநில அரசின் அமைச்சராக உள்ள நவ்ஜோத் சித்து பாஜகவுக்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் சித்து மனைவி அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வருமான அமரிந்தர் சிங் சித்து மனைவிக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், சித்து மனைவிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது பொய்யான குற்றச்சாட்டு என கூறியுள்ளார். சித்துவின் மனைவி அமிர்தசரஸில் போட்டியிட மறுத்துவிட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்தால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என அவர் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த பேச்சு பஞ்சாப் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: