இருளில் மூழ்கும் கன்னியாகுமரி, குழித்துறை: சமூக விரோதிகள் அடாவடி: சுற்றுலா பயணிகள் அச்சம்

கன்னியாகுமரி: சர்வதேச  சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தற்போது கோடை விடுமுறை சீசன் ஆகும்.  இதனால் தினமும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும்,  வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இவர்கள்  முதலில் கடற்கரையில் அமர்ந்து சூரிய உதயத்தை கண்டு களிக்கின்றனர். பின்னர்  கடலில் புனித நீராடிவிட்டு பகவதியம்மனை தரிசனம் செய்கின்றனர். அதனை  தொடர்ந்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைகளை  பூம்புகார் படகு போக்குவரத்து மூலம் கண்டுகளிக்கின்றனர். இந்தநிலையில்  கடந்த சில தினங்களாக கன்னியாகுமரியில் அறிவிக்கப்படாத மின்தடை நிலவி  வருகிறது. இரவு வேளையில் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை  மின்தடை  ஏற்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் நிற்கும் நிலை  ஏற்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சமூக விரோத கும்பல் திருட்டு  சம்பவங்களில் ஈடுபடுவதும் நடந்து வருகிறது.

தற்போது  கன்னியாகுமரியில் வைகாசி விசாக திருவிழா நடைபெறுவதால் தினமும், சிறப்பு  தீபாராதனை, சொற்பொழிவு, அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த  சமயத்தில் ஏற்படும் மின்தடையால் பக்தர்கள் கோயிலில் சென்று வழிபட  முடியாமல் தவிக்கின்றனர்.  எனவே மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளின்  நலன்கருதி அறிவிக்கப்படாத மின்தடை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள்  மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்று  நாகர்கோவில், மார்த்தாண்டம், குளச்சல் உள்பட மாவட்டம் முழுவதும் இரவு,  பகலாக அறிவிக்கப்படாத மின்தடை நிகழ்கிறது. இதனால் மக்கள் கடும்  அவதியடைந்துள்ளனர். வர்த்தக நிறுவனங்களின் வியாபாரமும்  பாதிக்கப்பட்டுள்ளது.

இருளில் மூழ்கும் குழித்துறை பாலம்

குழித்துறை  தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மார்த்தாண்டம் வெட்டுவெந்நியை அடுத்து மிக  பழமையான பாலம் ஒன்று உள்ளது. சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட  பழமையான பாலம் இது. என்எச் 47 தேசிய நெடுஞ்சாலையில் இயங்கும் அனைத்து  வாகனங்களும் இந்த பழைய பாலம் வழியாகவே சென்று வந்தன. இந்த நிலையில்  ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்ததால் பழமையான பாலத்தில்  பில்லர்கள் சுமார் ஒன்றரை அடிவரை மண்ணில் புதைந்தன. இதனால் இப்பாலம்  பழுதடைந்து, வலுவிழந்து பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் ஆபத்தில் சிக்கும்  நிலை ஏற்பட்டது. எனவே அருகில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள்,  அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பழைய  பாலத்துக்கு அருகில் நில ஆர்ஜிதம் செய்து மிக அகலமாக புதிய பாலம்  அமைக்கப்பட்டது. கடந்த 2007ல் பெல்லார்மின் எம்பியாக இருந்தபோது, தரைவழி  மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு புதிய பாலத்தை  திறந்து வைத்தார். தற்போது புதிய பாலம் வழியாக வாகனங்கள் இயங்கி வருகின்றன. இந்த  புதிய பாலத்தில் இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகளும்  அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் நாளடைவில் இவை பழுதடைந்து ஒவ்வொன்றாக  ஒளியிழந்தன. தொடர்ந்து சரிசெய்வதும், பழுதடைவதுமாக இருந்து வருகிறது.

இந்த  நிலையில் கடந்த ஒரு மாதமாக இந்த புதிய பாலத்தில் உள்ள மின்விளக்குகள்  எரியவில்லை. இதனால் பாலமே இரவு நேரங்களில் இருளில் மூழ்கி வருகிறது.  பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் கடும் சிரமங்களை சந்தித்து  வருகின்றனர். அதுபோல விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. மின்விளக்குகள்  எரியாததை பயன்படுத்தி இரவு நேரங்களில் பாலம் வழியாக நடந்து செல்லும்  பொதுமக்களிடம் வழிப்பறி உட்பட குற்றச்ெசயல்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.  அதுபோல இருளான இடத்தில் அமர்ந்து சிலர் மது அருந்துகின்றனர். இவர்கள்  போதையில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சம்பவங்களும் நடக்கும் வாய்ப்பு  உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம், பாலத்தில் உள்ள மின்விளக்குகளை  சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காங்கிரஸ் போராட்டம்

குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திங்கள்சந்தை, இரணியல், குளச்சல், மணவாளக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக இரவு வேளைகளில் சமூக விரோத கும்பல் மின்தடையை சாதகமாக பயன்படுத்தி நகைபறிப்பு, வழிப்பறிகளில் ஈடுகின்றனர். குறிப்பிட்ட நாளுக்குள் மின்கட்டணம் செலுத்ததவறினால் மின்இணைப்பு துண்டிக்கும் மின்வாரியம், அறிவிக்காமல் மின்தடை ஏற்படுத்துவது நியாயம் தானா? எனவே மின்வாரியம் உடனடியாக இதற்கு ஒரு தீர்வு கண்டு சீரான மின்வினியோகம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி விரைவில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று பிரின்ஸ் எம்எல்ஏ தெரிவித்தார்.

Related Stories: