திருச்சுழி அருகே குடிநீருக்கு 5 கி.மீ தூரம் பயணம்: தவிக்கும் அன்னலட்சுமிபுரம் கிராம பெண்கள்

திருச்சுழி: திருச்சுழி அருகே, அன்னலட்சுமிபுரம் கிராம மக்கள், குடிநீருக்காக 5 கி.மீ தூரம் பயணம் செய்து தண்ணீர் பிடிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. திருச்சுழி அருகே உள்ள அன்னலட்சுமிபுரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் தண்ணீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் ஆரம்ப காலங்களில் உப்பு தண்ணீரை சேமித்து வைத்தனர். சில மாதங்களில் உப்புத்தண்ணீரும் வராததால், அந்த தண்ணீர் தொட்டி காட்சிப் பொருளாக உள்ளது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 10 நாட்களுக்கு ஒருமுறை ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் நீர் மட்டும் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த நீரும் எப்போது வரும் என தெரிவதில்லை. இந்த தண்ணீரை பிடிப்பதற்கு பெண்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடும் அவலநிலையும் உள்ளது. சிறிதளவு கிடைக்கும் தாமிரபரணி நீரும் ஆங்காங்கே தேங்குவதால், அந்த நீரை பருகும்போது காய்ச்சல், வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்படுகிறது. இதனால், பலர் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சில ஆண்டுகளாக மழையில்லாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், உப்பு தண்ணீர் கூட கிடைக்காமல் பரிதவித்து வருவதாக கூறுகின்றனர்.

மேலும், அன்னலட்சுமிபுரம் கிராமத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள கிராமத்திற்கு சென்று குடங்களில் தண்ணீர் சேகரித்து வருகின்றனர். அங்குள்ளவர்கள் வெளியூர் ஆட்கள் தண்ணீர் பிடிக்கக்கூடாது என அன்னலட்சுமிபுரம் கிராம பெண்களிடம் சண்டை போடுகின்றனர். கிராமத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பிரச்சனையால், இக்கிராமத்திற்கு உறவினர்கள் யாரும் வருவதில்லை. அவ்வாறு வந்தாலும் உடனடியாக திரும்பி விடுகின்றனர். தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு குடிநீர் வழங்க முடியாமல் தவிக்கின்றனர். இதற்காக தமிழக அரசு கட்டிக் கொடுத்த தொட்டியும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர். எனவே, அன்னலட்சுமிபுரம் கிராமத்தின் தண்ணீர் பிரச்னை எப்போது தீரும் என ஏக்கத்தோடு பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

Related Stories: