மீண்டும் சர்ச்சை பேச்சு கமல் மீது செருப்பு வீச்சு

திருப்பரங்குன்றம்:  ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து’ என்று கமல் பேசியதற்கு பாஜ மற்றும் இந்து அமைப்பினர் இடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால், 2 நாட்கள் பிரசாரத்தை ரத்து செய்திருந்த கமல், நேற்று  திருப்பரங்குன்றம் தொகுதியில் மநீம கட்சி வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து பேசியதாவது:நான் பேசியதற்கு கோபப்படுகிறார்கள்.  நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை. நான் சொன்னது சரித்திர உண்மை.  கோட்சே தீவிரவாதி என்ற எனது கருத்தில் மாற்றம் இல்லை. சிறுபான்மை மக்களும் என் மக்கள். நான் வந்த வைணவ  குலத்தில், ‘தொண்டர் அடிபொடி’ என்று சொல்வார்கள். அதாவது மனிதர்கள் மண்ணோடு மண்ணாக மாறுகிறவர்கள்தான்.  சாதிச் செருக்கு, மதச்செருக்கு நிற்காது. இங்கிருக்கும் எல்லோரும் எனது தீவிர ரசிகர்கள். தீவிர அரசியலில்  இறங்கியுள்ளோம். தீவிரமாகத்தான் பேசுவோம். தீவிரம் என்ற வார்த்தையை பிடித்துக் கொண்டு மக்களை ஏமாற்றாதீர்கள். நீங்கள் டெல்லியில் இருந்தாலும் சரி, சென்னையில் இருந்தாலும் சரி, மக்களை ஏமாற்ற முடியாது. இந்த அரசு வீழும்.  நாம் வீழ்த்துவோம். என் பிரசாரத்தை நிறுத்தினால் என் தம்பிகள் வெளியில் வந்து பேசுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

செருப்பு வீச்சு: திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து, நேற்று இரவு கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். மேடையில் இருந்த கமல்ஹாசன், நிர்வாகிகள் பேசி முடித்த பிறகு, பேசுவதற்காக  எழுந்து மைக் அருகில் வந்தார். அப்போது திடீரென கூட்டத்தில் இருந்த ஒருவர் கமலை நோக்கி ெசருப்பை வீசினார். செருப்பு மேடையின் முன்பாக விழுந்தது. அவருடன் எழுந்து சிலர் கமலை கண்டித்து கோஷமிட்டனர்.  தொண்டர்கள் செருப்பு வீசியவர்களை சூழ்ந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், செருப்பு வீசிய நபர் மற்றும் அவருடன் கோஷமிட்ட 4 பேரை மீட்டு சென்றனர். கட்சி நிர்வாகிகள் கொடுத்த புகாரின்பேரில், அவர்களை போலீசார்  கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

முன்ஜாமீன் கோரி மனு

கமலின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார், அவர் மீது மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதி  பி.புகழேந்தி முன்பு கமல்ஹாசன் தரப்பு வழக்கறிஞர் நேற்று ஆஜராகி, ‘‘கமல் மீதான வழக்கை ரத்து செய்வது தொடர்பான மனுவை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “இது விடுமுறை கால நீதிமன்றம். வழக்கை ரத்து செய்யக்கோரும் மனுவை அவசர வழக்காக ஏற்க முடியாது. தேவைப்பட்டால், முன்ஜாமீன் கோரி மனு செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.இதனையடுத்து கமலுக்கு முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: