23வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு நேபாளி ஷெர்பா புதிய சாதனை

காத்மாண்டு: நேபாளத்தை சேர்ந்த கமி ரிதா ஷெர்பா 23வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு, புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

உலகிலேயே மிக உயரமான சிகரமாக கருதப்படும் எவரெஸ்ட் 8,850 மீட்டர் உயரம் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதம் வரை மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் பணியில் ஷெர்பா இனத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், நேபாளத்தை சேர்ந்த கமி ரிதா ஷெர்பா (49), நேற்று காலை 7.50 மணி அளவில் 23வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக இமாலயன் டைம்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 1994ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கமி ரிதா ஷெர்பா எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வருகிறார்.

1995ல் மட்டும் அவர் முயற்சி கைகூடவில்லை. கடந்த 2017ல் 21வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு, அபா ஷெர்பா, புர்பா தஷி ஷெர்பா ஆகியோரின் உலக சாதனையை சமன் செய்தார். கடந்த ஆண்டு அவர் 22வது முறையாக எவரெஸ்ட்டில் ஏறி உலக சாதனை படைத்தார். இம்முறை தனது சொந்த சாதனையை முறியடித்து 23வது முறையாக எவரெஸ்டில் ஏறி புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.

Related Stories: