கத்திவாக்கம் மேம்பாலத்தில் கலவை இயந்திரம் மோதி பேருந்து படிக்கட்டு சேதம்

திருவொற்றியூர்: திருவான்மியூரில் இருந்து எண்ணூர் வரை செல்லும் மாநகர பேருந்து (தடம் எண் 1சி) எண்ணூர் பேருந்து நிலையத்திற்கு செல்ல கத்திவாக்கம் மேம்பாலத்தின் மீது நேற்று காலை சுமார் 7 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்துக்கு முன்னால் டிராக்டர் மூலம் இழுத்து சென்று கொண்டிருந்த கட்டுமான கலவை இயந்திரம் திடீரென நிலை தடுமாறி சாலையில் ஒரு புறமாக கவிழ்ந்தது. அதில் எதிர்பாராதவிதமாக அந்த இயந்திரத்தின் மீது பேருந்து உரசியது.

இதை பார்த்த பஸ் பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதையடுத்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்க படிக்கட்டு சேதமானது. பேருந்தின் ஓட்டுனர் சாமர்த்தியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் மற்றொரு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் கலவை இயந்திரத்தின் அடியில் சிக்கி தெரு நாய் ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் கத்திவாக்கம் மேம்பாலத்தின் மீது போக்குவரத்து நிறுத்தப்பட்டு சர்வீஸ் சாலையில் இயக்கப்பட்டது. சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: