இந்தியாவில் இதுவரை எந்த பிரதமரும் மோடி போல இப்படி பொய் சொன்னதில்ைல: திருப்பரங்குன்றம் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மதுரை, மே 16: இந்தியாவில் இதுவரை இருந்த எந்த பிரதமரும் மோடி போல இப்படி பொய் சொன்னதில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரண்டாம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று மாலை விரகனூர், அனுப்பானடி, வில்லாபுரம், வலையங்குளம் ஆகிய இடங்களில் அவர் பேசியதாவது: பாஜ தலைவர் தமிழிசை தூத்துக்குடி தொகுதியில் டெபாசிட் பெறுவாரா என்பதே சந்தேகம் தான். அந்த தோல்வி பயத்தில் பொய்களை சொல்லி வருகிறார். பிரதமர் மோடி பொய் சொல்வதைப் பார்த்து, இவரும் பொய் சொல்லி வருகிறார். மோடி பிரதமர் ஆவதற்கு முன்பும், ஆன பிறகு கடந்த ஐந்தாண்டிலும், தற்போது அந்த பதவியை இழக்கப்போகும் நேரத்திலும் தொடர்ந்து பொய்களையே சொல்லிக் கொண்டு வருகிறார்.

தேர்தலுக்கு முன் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து, ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் ₹15 லட்சம் வழங்குவேன் என்றார். யாருக்காவது வெறும் 15 ரூபாயாவது வழங்கினாரா? இது ஒரு பொய். அடுத்ததாக, ஐந்தாண்டில் 10 கோடி பேருக்கு வேலை வழங்குவேன் என்றார். யாருக்காவது வழங்கினாரா? இதுவும் ஒரு பொய். பிரதமர் ஆன பிறகு, ‘நான் டீ விற்றுக் கொண்டிருந்தேன். இப்போது பிரதமர் ஆகி விட்டேன்’ என்றார். ஆனால், அவரது நெருங்கிய நண்பர் சமீபத்தில், ‘மோடி டீ விற்றதை நான் பார்த்ததே இல்லை’ என்று கூறி, மோடியின் அடுத்த பொய்யை நிரூபித்துக் காட்டி இருக்கிறார். இப்போது தேர்தல் வந்ததும் அடிக்கடி பொய் சொல்கிறார். பொய் சொல்வதில் மோடிக்கு நிகர் யாருமில்லை. இந்தியாவில் இதுவரை இருந்த பிரதமர்களில் எந்த பிரதமரும் இப்படி பொய் சொன்னதில்லை. இவர் பொய்யை மட்டுமே சொல்லி வருகிறார். ஐந்தாண்டுகளில் பத்திரிகை நிருபர்களை சந்தித்ததே இல்லை. இப்போது தேர்தல் வந்ததும், தனக்கு வேண்டிய நிருபர்களை மட்டும் அழைத்து பேட்டி கொடுக்கிறார். அதிலும் பொய்களைத்தான் அவிழ்த்து விடுகிறார். 1987ம் ஆண்டு அத்வானி நடத்திய பேரணியை டிஜிட்டல் கேமராவில் படம் பிடித்து, அவருக்கு இமெயிலில் அனுப்பி வைத்தேன் என்று கூறினார். ஆனால், இமெயிலே இந்தியாவில் 1995ல்தான் அறிமுகமானது. டிஜிட்டல் கேமரா 1990ல்தான் வெளிவந்தது. இது நாட்டுக்கே அவமானம். சமீபத்தில் பாகிஸ்தான் மீது போர்ச்சூழல் ஏற்பட்டது. அப்போது ராணுவத்தளபதிகள் மோடியை சந்தித்தனர். அவர்களுடன் பேசிய ராணுவ ரகசியத்தை நாட்டின் பாதுகாப்பு கருதி அவர் வெளியிடக்கூடாது. ஆனால், அவர் வெளியிட்டார். அதிலும் பொய்யைத்தான் சொல்லியுள்ளார். பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த மழை மேகம் சூழ்ந்துள்ள நேரத்தில், நடத்தலாமா என்று ராணுவ அதிகாரிகள் இவரிடம் கேட்டார்களாம். அதற்கு மழை மேகம் இருக்கும்போது தாக்குதல் நடத்துவதுதான் சரியான தருணம். ஏனென்றால் பாகிஸ்தானின் ரேடாரிலிருந்து தப்பலாம் என்று இவர் சொன்னாராம். ஆனால் ரேடார் மழை மேகங்களையும் ஊடுருவும் சக்தி கொண்டது. இப்படித்தான் மோடி பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஒரு பாடல் சொல்வார்கள், பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே... என்று. அந்த பாடலை பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பிரதமர் பெருமானே... என்று பாடலாம். ஏப். 18ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மோடிக்கு முடிவு கட்ட வாக்களித்திருக்கிறீர்கள். இந்த தேர்தலில் தமிழ்நாட்டை கொள்ளையடித்து ஏமாற்றிக் கொண்டிருக்கிற எடப்பாடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உதயசூரியனில் வாக்களியுங்கள். 19ம் தேதி நடைபெற இருக்கிற நான்கு தொகுதிகளிலும் மக்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த மைனாரிட்டி ஆட்சிக்கு மோடி முட்டுக் கொடுத்துக் காத்துக் கொண்டிருக்கிறார். வரும் 23ம் தேதி முடிவு வெளியாகும்போது மோடி ஆட்சியும் இருக்கப்போவதில்லை. இங்குள்ள எடப்பாடி ஆட்சியும் இருக்கப்போவதில்லை. இது நிச்சயம் நடக்கும். இதில் எந்த மாற்றமும் ஏற்படாது. இந்த திருப்பரங்குன்றம் தொகுதியில் 2016 நவம்பரில் நடந்த இடைத்தேர்தலில் சுயநினைவின்றி மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவின் கைரேகையை அவருக்குத் தெரியாமல் மோசடியாக அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவில் பதிவு செய்து கொடுத்தார்கள். அது மோசடி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததால்தான் இப்போது இங்கு இடைத்தேர்தலே நடக்கிறது. இந்த அக்கிரமத்தை, சதியை எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் கூட்டுச் சேர்ந்துதான் அரங்கேற்றினார்கள். அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்டி திமுகவை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

தோல்வி பயத்தில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தொகுதியில் நேற்று காலை சிலைமான், புளியங்குளம் கிராமங்களில் வீதிகளில் நடந்து சென்றும், திண்ணையில் அமர்ந்தும் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். புளியங்குளம் கிராம தெருக்களில் நடந்து சென்று மக்களை சந்தித்தார். அவரிடம் மக்கள் கைகுலுக்கி உற்சாகமாக செல்பி எடுத்துக் கொண்டனர். சிலைமான் கிராமத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், அங்குள்ள அண்ணா மன்றத்தில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:

எல்லா கிராமங்களிலும் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதற்கு தீர்வாக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஆனால் அதிமுக அரசு உள்ளாட்சித்தேர்தலை நடத்தக்கூடாது என அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறது. உள்ளாட்சித்தேர்தல் நடத்தினால், எந்த ஒரு இடத்திலும் அவர்கள் வெற்றி பெற முடியாது என்பதால்தான் இப்படி நடந்து கொள்கின்றனர்.

 திமுக ஆட்சியில் முறையாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி தேர்தல் நடத்தி, 12,500 கிராம ஊராட்சிகளிலும் பிரதிநிதிகளை நிறுத்தி, எல்லா பகுதியிலும் நிர்வாகத்தின் கீழ் சிறந்த செயல்பாடுகளை செய்து வந்தோம். இந்நிலை மீண்டும் தொடர வேண்டும். ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மோடி இந்திய பிரதமர் என்பதை மறந்து, வெளிநாடு வாழ் பிரதமராக இருந்தார். ₹400 கோடி வரை வெளிநாட்டுக்கு பறந்ததில் செலவழித்ததாக கணக்கு சொல்கிறார்கள். உலக அரங்கில் பிரதமராக இருந்தாரே தவிர, இந்திய பிரதமராக அவர் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: