சாலையில் பிரதமருக்கு ஆதரவாக கோஷம் போட்ட மோடி ஆதரவாளர்களிடம் கைகுலுக்கிய பிரியங்கா

உபி.யில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, மபி.யிலும் தீவிர பிரசாரத்தில் கலந்து கொண்டு வருகிறார். இந்தூரில் பிரசாரத்துக்காக பிரியங்கா நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலை ஓரத்தில் நின்றிருந்த சிலர், ‘மோடி... மோடி...’ என்று கோஷமிட்டனர். இதை பார்த்த பிரியங்கா, காரை நிறுத்தும்படி கூறினார். காரில் இருந்து இறங்கிய ஓடிய அவர், கோஷமிட்ட நபர்களிடம் சென்று பேசினார். பின்னர் அவர்களிடம் கைகுலுக்கினார்.

அப்போது சிரித்த முகத்துடன், “உங்களுக்கு என்று ஒரு நிலைப்பாடு உள்ளது. எனக்கென்று ஒரு நிலைப்பாடு இருக்கிறது...,” என்றார். அவரிடம் மோடி ஆதரவாளர்கள் சிலரும் வாழ்த்து தெரிவித்தனர். மோடி ஆதரவாளர்களிடம் பிரியங்கா பேசிய விதம், அனைவரையும் நெகிழ செய்தது. அம்மாநில காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளது.  

தடாலடி பிரியங்கா: பிரியங்கா காந்தி பிரசாரத்தின்போது யாரும் எதிர்பார்க்காத சில விஷயங்களை செய்து அசத்தி வருகிறார். சமீபத்தில் வாக்கு சேகரிக்க சென்ற அவர், சர்வ சாதாரணமாக பாம்புகளை பிடித்தது வைரலானது. நேற்று முன்தினம் ரத்லம் என்ற இடத்தில் பிரசாரம் செய்தபோது, அவரை பார்ப்பதற்காக ஏராளமானவர்கள் கைகளை நீட்டியவாறு காத்திருந்தனர். இதைப் பார்த்த பிரியங்கா உடனடியாக தடுப்பு கட்டைகளை தாண்டிச் சென்று தொண்டர்களை சந்தித்தார். அவர் தடுப்புகளை தாண்டியதில் வேறு வழியின்றி, உடனடியாக பாதுகாப்பு வீரர்களும் தடுப்புகளை தாண்டிச் சென்று அவருக்கு பாதுகாப்பு அளித்தனர்.

மக்களின் ரேடாரில் பிரதமர் மோடி:  பஞ்சாப்பில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பிரியங்கா காந்தி, “பாலகோட் தாக்குதலின் போது, வானம் மேகமூட்டமாக இருந்ததால், பாகிஸ்தான் ரேடாரில் இந்திய விமானங்கள் சிக்காமல் எளிதில் தாக்க முடியும் என்று பிரதமர் கூறினார். தற்போது, பிரதமர் மோடி குறித்த உண்மை மக்களின் ரேடாரில் தெரிய வந்துள்ளது. 2 கோடி வேலைவாய்ப்பு தருவதாக கூறிய வாக்குறுதியை மோடி காப்பாற்றவில்லை. இந்த 5 ஆண்டுகளில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த மக்களவை தேர்தல் ஜனநாயகத்தையும், நாட்டையும் காப்பாற்றும்,” என்றார்.

Related Stories: