கோவா கடலில் மிதக்கும் பெட்ரோலிய கழிவுகளால் கடல் உயிர்களுக்கு ஆபத்து: ஆய்வு தகவல்

பனாஜி: கோவா கடற்கரையில் பெட்ரோலிய கழிவுகள் மிதக்கும் போது உண்டாகும் நோய் கிருமிகளால் கடல்சார் வாழ்வியலும் அதில் வளரும் மீன்களை சாப்பிடுவதால் மனிதனும் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக சமீபத்திய கடலியல் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குனகரத்தின் பங்களிப்புடன், இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வக அங்கமான தேசிய கடலியல் நிறுவனம், நுண்ணுயிர் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இதில் வட கோவா மாவட்டங்களான வெகாடர், மோர்ஜிம் மற்றும் தென் கோவா மாவட்டங்களான கேன்சவுலியம், பீடல் கடற்கரைகளில் இருந்து பெட்ரோலிய கழிவுகள் கலந்த வண்டல் தண்ணீர் மாதிரி எடுத்து ஆய்வு செய்யப்பட்டது. இது குறித்து ஆய்வுக் குழுவின் தலைவரும் மூத்த விஞ்ஞானியுமான ராக்கி காந்தேபார்க்கர் கூறியதாவது:

பருவமழை காலத்துக்கு முன் கோவா கடற்கரை பகுதிகளில், ‘தார் பால்ஸ்’ எனப்படும் பெட்ரோலிய கழிவுகள் அதிகளவில் மிதக்கின்றன. இந்த கழிவுகள் மிதப்பதற்கு முன்னும், அதற்கு பின்னரும் எடுக்கப்பட்ட தண்ணீர் மாதிரியை கொண்டு ஆய்வு செய்தோம். அதில், பெட்ரோலிய கழிவுகள் மிதக்கும் போது பாக்டீரியா, வைரஸ், நுண்ணுயிர் உள்ளிட்ட நோய் கிருமிகள் உண்டாவதும், கடல்சார் வாழ்வியல் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதும் முதல் கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது.

இந்த பெட்ரோலிய கழிவுகள், கடலில் நீருக்கடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது குறிப்பிட்ட காலம் வாழும் தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்களை உணவாக உட்கொள்ளும் விலங்கியல் தாவரங்கள் ஆகியவற்றின் வாழ்க்கை முறையை மறைமுகமாக மாற்றி விடுகிறது. இதனால் அவற்றை உட்கொண்ட மீன்களை சாப்பிடும் நாமும் நோயினால் பாதிக்கப்படுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: